உண்மையைச் சொல்கிறேன்
உண்மையைச் சொல்கிறேன், என். முருகன், ஐ.ஏ.எஸ்., நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, விலை 180ரூ.
இந்நூலாசிரியர் ஐ.ஏ.எஸ்.களிலும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் அரசின் ஒவ்வொரு துறைகளுக்குமான பொறுப்புகள், நிர்வாக நடைமுறைகள், சிக்கல்கள், அவற்றை களையும் வழிமுறைகள், நிர்வாக நுணுக்கங்கள் என்று பல விஷயங்களையும் தனது அனுபவங்களோடு ஒப்பிட்டு எளிய முறையில் துக்ளக், தினமணி போன்ற பத்திரிகைகளில் கட்டுரைகளில் எழுதி வருவது வாசகர்கள் அறிந்ததே. அத்துடன் அன்றாட நாட்டு நடப்புகள், அரசியல் நடைமுறைகளையும் உரிய கோணத்தில் அலசி ஆராய்ந்து, சமூக விழிப்புணர்வு கட்டுரைகளையும் எழுதி வருகிறார். அந்த வகையில் 2008 முதல் 2010 வரை தினமணி நாளிதழில் இவர் எழுதி வெளியான பல்வேறு கட்டுரைகளில் சிறப்பான 42 கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மக்களாட்சிக்கு விடப்படும் சவால் என்ற முதல் கட்டுரையிலேயே அரசியலுக்கு எந்தவித தொடர்பும் இல்லாத பெரும் தொழிலதிபர்கள், மாநிலங்களவை உறுப்பினர்களாவது சரியா, தவறா என்பதை பல்வேறு கோணங்களில் விளக்கியுள்ளார். இதே போல் இடஒதுக்கீடு, பண வீக்கம், ஓய்வுக்குப் பின் பணி நீட்டிப்பு, விவசாய வீழ்ச்சி, சமச்சீர் கல்வி, ஓட்டு வங்கி, சமூக நீதி, நல்லாட்சிக்கான அடையாளம், தலைமைக்கான தகுதி என்று பல்வேறு விஷயங்களும், அதற்கான தீர்வுகளும் என எழுதப்பட்ட தனித்தனி கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. சிந்தனையைத் தூண்டும் சிறப்பான சமூக விழிப்புணர்வு நூல்களில் இதுவும் ஒன்று. -பரக்கத். நன்றி: துக்ளக், 31/12/2014.