உன்னால் கடக்க முடியும்

உன்னால் கடக்க முடியும், ஓஷோ, தமிழில் வனமாமலை, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, பக். 376, விலை 200ரூ.

இருபதாம் நூற்றாண்டு சிந்தனையாளர்களுள் ஓஷோ ரஜனீஷுக்கு முக்கியமான இடம் உண்டு. பாரத ஞானப் பின்புலத்தில் மேற்கத்திய நாடுகளில் அவர் நிகழ்த்திய பிரசங்கங்கள் பல இப்போது தொடர்ந்து நூல் வடிவில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. வெளிநாட்டு பக்தர்களிடையே ஓஷோ உரையாடியதன் சில பகுதிகள் தொகுக்கப்பட்டு ஏற்கெனவே விஸ்டம் ஆப் தி சேண்ட் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் நூலாக வெளிவந்தது. அதுவே எளிய நடையில் மொழி பெயர்க்கப்பட்டு உன்னால் கடக்க முடியும் என்ற தமிழ் நூலாக இப்போது வெளிவந்திருக்கிறது. பீத்தோவன் போன்ற இசைக் காவியங்களைக் கூட கண்ணால் கேட்க முடியாது. ஏனெனில் கண்கள் செவிடு. நீங்கள் காதால் தான் கேட்க வேண்டும் என்பது போன்ற ஒப்பீடுகள், ரத்தினச் சுருக்கமான குட்டிக் கதைகள் என ஓஷோ முத்திரைக்கு இந்த நூலில் பஞ்சமில்லை. மணற்பாலையை நதியால் கடக்க முடியாது. ஆனால், தன்னை இழக்கத் தயாராகும் நதி நீர் வேறோர்இடத்தில் மழையாகப் பொழிந்து நதியாகும் என்ற ஓஷோவின் தத்துவமே இந்நூலின் பிரதானப் பகுதி. அவரது சூஃபிசம் தொடர்பான சொற்பொழிவுகளின் திரட்சியே இந்த நூல். நிறுவனமயமான மதத்துக்கும், போலித்தனமான ஆன்மிகத்துக்கும், அரசியல் அதிகாரத்துக்கும் எதிரான கலகக்குரல் ஓஷோ. அதே சமயம், தன்னுணர்வுடன் ஆன்மிகப் பயணம் மேற்கொள்ள விழையும் எவருக்கும் அவரது போதனைகள் காதோடு பேசும். வெறும் மொழிபெயர்ப்பாளராக மட்டுமல்லாது, ஆத்மார்த்தமாக உணர்ந்ததை தமிழில் நூலாகக் கொடுத்திருக்கிறார் வானமாமலை. தொடர்ந்து ஓஷோ நூல்களை வெளியிடம் கண்ணதாசன் பதிப்பகம் இதனையும் மிக நேர்த்தியாக வெளியிட்டுள்ளது. நன்றி: தினமணி, 27/4/2015.

Leave a Reply

Your email address will not be published.