உன் மீதமர்ந்த பறவை
உன் மீதமர்ந்த பறவை, பழநிபாரதி, குமரன் பதிப்பகம், சென்னை, பக். 80, விலை 80ரூ.
வாழ்வில் ஒருமுறையாவது ஒரு கவிதையாவது ஒரு மனிதன் எழுதிவிட வேண்டும். அப்போதுதான் அசலான மனிதனாக அவன் அவனை உணரும் தருணம் வரும் என்பார் கவிஞர் கந்தர்வன். அவர் சொன்ன அந்த அபூர்வ கணங்களை, உன் மீதமர்ந்த பறவை என்ற தமது கவிதைத் தொகுப்பில் காட்சியாகவும் சாட்சியாகவும் மாற்றியுள்ளார் கவிஞர் பழநிபாரதி. முன்னுரை என்பது ஒரு கோபுரத்தின் நுழைவாயிலைப் போன்றது. அது வசீகரிக்க வேண்டும். பிரம்மாண்டத்தின் ஒரு துளி ருசியை நம் கண்ணில் காட்டிவிட வேண்டும். பல்வேறு பரிசோதனைக்கு உட்படுத்தி ஒருவனை விண்வெளிக்கு அனுப்புவதைப் போன்று வாசகனை நூலுக்குள் கைப்பிடித்து அழைத்துவர வேண்டும். அந்த வகையில் அ.முத்துலிங்கத்தின் முன்னுரை இந்நூலுக்கு அழகு சேர்ப்பது அடர்த்தியானது. தொகுப்பு முழுக்க ஒரு அருபநதியாய் பழநிபாரதி வாசம் என்ற ஒரு படிமத்தை ஓடவிட்டு இருக்கிறார். உனக்காக நான் பறித்த மலர் உனது வாசனையால் நிரப்பியது, நீ போன பிறகு வந்த வாசனை ஒரு புல்வெளியை விரித்தது என்பதாக வாசனை பல பக்கங்களில் மணக்கிறது. ஐந்து நிலத்துக்குமான காதலை ஆறாம் திணையாக மாற்றி காதலைக் கொண்டாடுகிறார் கவிஞர். தவறவிட்ட ஒரு முத்தம் எப்படியிருக்கும் என்று கேட்டு அது வனத்துக்கு வெளியே அலையும் சிறுத்தை என்றும் தெருவில் உருளும் திராட்சை என்றும் எழுதும் பழநிபாரதி மிகச் சாதுர்யமாக இக்கவிதைப் புதைந்த விதை என்று தலைப்பிட்டுள்ளார். நிச்சயம் ஒருநாள் முளைக்கும் என்று வாசகன் எளிதாகப் புரிந்துகொள்கிறான். தொன்ப விளையாட்டு கவிதையில் காதலர்களுக்கு ஏன் கடற்கரை பிடிக்கிறது? என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு கடலை ஒரு காதல் காவியமாக விரித்து நம் முன் படிக்கத் தொடங்கிய பழநிபாரதி. காதலைப் பிரித்த குற்றவுணர்வில் கடவுள் விஷம் குடித்து நுரை கக்கிச் செத்துப் போனதைத்தான் அலைகள் உலகெங்கும் கரைகளில் எழுதிக்கொண்டிருக்கின்றன. என்று தமது புனைவு விளையட்டைப் பொருத்தமாக இந்தக் கவிதையில் ஆடி ஜெயித்துள்ளார். ஒரு கவிதையில் வரும் உறக்கத்தை ஆடையெனக் களைந்து என்ற படிமத்தை உணர்ந்துகொள்ள வாசகன் கற்பனையைக் கடன் வாங்கத்தான் வேண்டும். காதல் மட்டுமல்ல, காதலிக்குச் சொல்லும் சாக்கில் ஈழத்தை கருணையற்ற நிலம் என்று எழுதி கைவிடப்பட்ட இதயங்கள் நடுகற்களாகப் புதையுண்டிருக்கின்றன என்றும் தன் சமூகக் கோபத்தையும் பதிவு செய்துள்ளார் பழநிபாரதி. இந்த நூலின் இன்னொரு சிறப்பு பழநிபாரதியின் கவிதையை ஸ்கேன் செய்து காட்டியது போன்று புறவரிகளுக்கு அப்பாலான அக உணர்வைக் கோடுகள் மூலம் காட்டிய ஏ.பி. ஸ்ரீதரின் ஓவியங்கள். மொத்தத்தில் இந்நூல் காதலர்களுக்கான கலைத்துவ பரிசு. காதல் மொழியின் கௌரவம் என்றால் அது மிகையல்ல. -கவிதா. நன்றி: கல்கி, 20/7/2014.