எங்கெங்கு காணினும் அறிவியல்
எங்கெங்கு காணினும் அறிவியல், நெல்லை சு. முத்து, திருவரசு புத்தக நிலையம், சென்னை, பக். 128, விலை 60ரூ.
நாற்பது அறிவியல் தகவல்களை உள்ளடக்கிய தொகுப்பு இந்நூல். புதுப்புது அரிய அறிவியல் கண்டுபிடிப்புகள், சுவாரசியமான தகவல்கள். ஜாவாத் துவில் கி.பி. 1891 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய இனத்தை அடையாளம் காட்டுகிறதாம். இதனை பித்திக்காந்த்ரோப்பஸ் எரக்டஸ் என்கின்றனர் மானிடவியலாளர். ஜாவா மனிதனும், பீப்கிங் மனிதனும் ஒரே மரபுடையவர்கள். இவ்வினத்தினை இன்றைய மங்கோலாய்டு என்று கூறலாம் என்ற தகவல்களை இந்திய மரபணு நுட்பவியல் என்ற பகுதியில் தந்திருக்கிறார். உலகின் முதலாவது பெண்மணியான ஆர்த்தி என்ற பகுதியில் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான டிம் ஒயிட் என்பவரால் உலகின் முதலாவது மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க மொழியில் இதற்கு ஆர்த்திபித்திக்கஸ் ராமிதஸ் என்று பெயர் வைத்துள்ளார். ஆர்த்தி என்றால் தளம் அல்லது தலை. ராமித் என்றால் வேர் அல்லது மூலம். இது 44 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முதல் பெண்ணின் எலும்புக்கூடாம்.இன்றைக்கு தொல்லறிஞர்கள் கருத்துப்படி ஆர்த்திதான் நம் முதல் தாய் என்கிறார் நூலாசிரியர். மேலும் மரபணு சிகிச்சையால் கண் பார்வை மீட்கலாம், பூமிக்குப் பல சந்திரன்கள், சுருங்கி வரும் நிலா, நரையின் நிறத்திற்குக் காரணம், புற்றுநோய்க்குப் புது மருந்து, இமய மலையில் நிலத்தடி நீர் குறைவு, சஞ்சீவி மருந்து கண்டுபிடிப்பு, உருகும் வீடுகள் உள்ளே குளிர், காட்சி ரகசியம், விழி அசைவினால் இயங்கும் கணிப்பொறியா? பூச்சி என்றால் பயம், தீயை விழுங்கும் வித்தை முதலிய நாற்பது கண்டுபிடிப்புத் தகவல்களுடன் அவற்றிற்கான நிழற்படங்களையும் நடுநடுவே இணைத்திருப்பது படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. படித்தறிய வேண்டிய அரிய அறிவியல் தகவல்கள். நன்றி: தினமணி, 22/6/2015.