எண்ணுகிறேன் எழுதுகிறேன்
எண்ணுகிறேன் எழுதுகிறேன், நா. மகாலிங்கம், இராமானந்த அடிகளார் அறக்கட்டளை, கோவை, பக். 216, விலை 155ரூ.
ஓம் சக்தி இதழில் நூலாசிரியர் எழுதிய இருபது கட்டுரைகள் இங்கே நூலாக மலர்ந்திருக்கிறது. தொழிலதிபர், கல்வியாளர், ஆன்மிகத்தில் நாட்டமுடையவர் என எல்லாருக்கும் தெரிந்த நூலாசிரியர், ஒரு சிறந்த சிந்தனையாளர் என்பதையும் இந்நூல் மெய்ப்பிக்கிறது. காஷ்மீர் பிரச்னை, தென்னக நதிகள் இணைப்பு, சாலை நெரிசல், விவசாயிகளின் பிரச்னைகள், பாரம்பரிய விளையாட்டுகளைப் பாதுகாப்பது, கிராமப்புற மருத்துவம், அரசு வழங்கும் இலவசம், சமச்சீர் கல்வி என இன்றைய உயிருள்ள பல பிரச்னைகளை இந்நூலில் உள்ள கட்டுரைகள் பேசுகின்றன. இந்திய ராணுவ வசமுள்ள காஷ்மீர்ப் பள்ளத்தாக்கையும், பௌத்தர்களின் லடாக் பகுதியையும் ஐ.நா.விடம் ஒப்புவித்து, உலகச் சுற்றுலா மையங்களாக அவற்றைச் செய்துவிடுவது நல்லது. இந்தியாவுக்கு ஜம்முவும், பாகிஸ்தானுக்கு அதன் வசமுள்ள காஷ்மீர் மேற்குப் பிரதேசமும் டிக்ஸன் தீர்ப்புப்படி வழங்கிவிட்டால், இரு நாடுகளுக்கும் கிடைக்கும் ஆதாயங்களால் ஆறுதல் பெறலாம் என பல ஆண்டுகளாக இருக்கும் காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு சொல்கிறார். அரசு இலவசமாகப் பொருள்களை மக்களுக்குத் தரக்கூடாது என்கிறார். இலவசங்களுக்கு மாற்றாக நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம் என்கிறார். சில்லறை வர்த்தகத்தில் பெரிய நிறுவனங்கள் ஈடுபடுவதால் ஏற்படும் பல்வேறு தீமைகளை விளக்கியுள்ள நூலாசிரியர் நூலாசிரியர், அமெரிக்காவின் வால்மார்ட், மான்சாண்டோ வண்கி நிறுவனங்கள் இந்தியாவில் சில்லறை வர்த்தகத்திலும் முதலீடு செய்வது தடுக்கப்படத்தான் வேண்டும். வால்மார்ட்டை மட்டும் அல்ல, உள்நாட்டு ரிலையன்ஸ், டாட்டா நிறுவனங்களையும் தடுக்க வேண்டும். இன்றைய பிரச்னைகளைப் பற்றிய தெளிவையும், அவற்றுக்கான நடைமுறை சாத்தியமான தீர்வுகளையும் மிகவும் வித்தியாசமான கோணத்தில் முன் வைக்கும் சிறந்த நூல். நன்றி: தினமணி, 16/6/14.