எந்நாளும் எங்கள் நெஞ்சில்
எந்நாளும் எங்கள் நெஞ்சில், மேதகு ஆ.ப.ஜெ. அப்துல்கலாம், பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்றம், பக். 192, விலை 225ரூ.
மாணவர்களின் இதயமாக விளங்கிய அப்துல்கலாம் ஒரு சிறந்த கவிஞரும்கூட. அந்த வகையில் அவரது பிறந்த நாளை மாணவர் தினமாகக் கொண்டாடுவதுடன் நிறுத்திக் கொள்ளாமல், மாணவர்களிடையே உள்ள படைப்புத் திறனை வெளிக்கொணரும் வகையில் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனம் மாணவர்களின் கவிதைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டு அப்துல்கலாமுக்கு பெருமை சேர்க்கும் முயற்சி இது. மாணவர்கள், ஆசிரியர்கள் அலுவலர்கள் என அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் பெறப்பட்ட அப்துல்கலாம் பற்றிய கவிதைத் தொகுப்பு இது. நன்றி: குமுதம், 7/12/2015.
—-
செவ்வந்திகளை அன்பளிப்பவன், ஸ்ரீதர் பாரதி, எக்காளம் வெளியீடு, பக். 80, விலை 70ரூ.
ஏரிக்கரை உழவுக்காட்டில் எரோட்டும் சம்சாரிகளின் வாழ்வியலை கவிதைகளாக வடித்தெடுக்கும் பிரதிநிதியாக கவிஞர் இத்தொகுப்பின் மூலம் நம்முன் நிற்கிறார். செம்மண் வீட்டுக்கும் செவலை மாட்டுக் கொம்புக்கும் புதுவண்ணம் வந்து சேரும் என்று சம்சாரி பண்டிகையை அறிவிக்கிறார். தாத்தாவின் கட்டைவிரல் ரேகையை கல்வெட்டாக்கிக் காட்டுகிறார். சவரக்காரனின் சிறுகத்தி வணங்கா முடிகளையும் கவிழ்த்து விடும் சூட்சுமம் இவரது கவிதைகளிலும் உண்டு. இன்னும் கிராமத்தின் ஆவணமாக நிறைய காட்டுகிறார். கவிதை இவரது நடையில் உயிர் பெறுகிறது. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 7/12/2015.