இந்தியா நமது இதயம்
இந்தியா நமது இதயம், கே.ஏ.எஸ். முகமது ரஃபி, எம். சாய்ரா வெளியீடு, பக். 84, விலை 30ரூ.
உலக அமைதி, தேசிய ஒற்றுமை, இளைஞர் நலன், இவையே எண்ணமாய் மனிதன் வாழ வேண்டும் என்பதுதான். இந்தியா நமது இதயம் என்ற நூலின் அடிநாதம். தீவிரவாதம் என்ற வார்த்தையைக்கூட இனி நாம் வாசிக்கக்கூடாது என்கிற தேச நலன் கட்டுரைகளில் தெரிகிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் எல்லா இந்தியர்களும் கட்டுப்பாட்டனும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தேச நலன் கருதியே. தீண்டாமை ஒழிய சாதியின் மீதான நம்பிக்கையும் வெறியும் ஒழியவேண்டும் என்பதில் ஒரு சமதர்ம நியாயம் தெரிகிறது. மொழி, இனம், மாநிலம், மதம் கடந்து ஒற்றுமை உணர்வுடன் இந்தியாவை உயர்த்திக்காட்ட நூலாசிரியர் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் கூறும் அறிவுரைகள் இன்றைய காலத்திற்கு அவசியமாகப்படுகிறது. இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 14/12/2015.
—-
வேர்ட்ப்ரஸ் மூலம் இணையதளம் அமைக்கலாம் வாங்க, குணசீலன் வீரப்பெருமாள், நர்மதா பதிப்பகம், பக். 208, விலை 100ரூ.
இணைய உலகம் இன்று எங்கும் எதிலும் பரந்து விரிந்து கொண்டிருக்கிறது. மளிகைக்கடை அண்ணாச்சி முதல் கார்ப்பரேட் கம்பெனி சிஇஒ வரை தனக்கென தனியே ஒரு இணைய தளம் வைத்துக்கொள்ள வேண்டிய உலகமாக மாறிவருகிறது. அது அத்தியாவசியமும்கூட. அதன்படி, இணையதளம் என்றால் என்ன? அதன் சில அடிப்படைகள் தொடங்கி, வேர்ட்பிரஸ் எப்படி நிறுவுவது, உள்நுழைந்ததும் செய்ய வேண்டியது, வார்ப்புரு, பக்கம், பதிவு, மெனு உருவாக்கம், மெனு பார் உருவாக்கம், பயணர்கள், டூல்ஸ், வேர்ட்பிரஸ் இணையதளங்களை பாதுகாப்பது எப்படி, வேர்ட்பிரஸை பயன்படுத்தும் நிறுவனங்கள் உள்ளிட்ட தகவல்களை எளிய முறையில் விளக்கியுள்ளார். நூலைப்படித்தால் நீங்களும் ஒரு இணையதளம் அமைக்கலாம், வெகு எளிதாக. இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 14/12/2015.