எனக்கு நிலா வேண்டும்
எனக்கு நிலா வேண்டும், சுரேந்திர வர்மா, தமிழில் எம்.சுசீலா, சாகித்ய அகாதெமி, பக். 960, விலை 550ரூ.
குறிப்பிட்ட ஒரு துறையை மையமாகக் கொண்டு புதினம் எழுதப்படுவது புதிய விஷயமல்ல. ஹிந்தி எழுத்தாளர் சரேந்திரவர்மா, அவர் சார்ந்த நாடகத் துறையின் பலம், பலவீனங்களையும், வாழ்க்கையின் எதிர்பாராத சிக்கல்களையும், உள்ளரசியலையும், தனிமனித குணாதிசயங்களையும் முஜே சாந்த் சாஹியே என்ற இப்புதினத்தில் மிகத் தெளிவாகச் சித்திரித்திருக்கிறார். உத்திரப் பிரதேசத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியான ஷாஜான்பூரின் சுல்தான்கஞ்சில் எழை பிராமண ஆசிரியரின் மகளாகப் பிறந்த யசோதா சர்மா, தனது கலைக்கனவால் உந்தப்பட்டு வர்ஷா வசிஷ்ட் என்று பெயர்மாற்றம் செய்து கொள்ளும்போது புதினம் தொடங்குகிறது. வர்ஷாவின் கலைப்பயணம் அவளது பார்வையிலேயே விரிகிறது. துணிச்சல், நேர்மை, பணிபு, தற்காப்புத் தன்மை, பண்பாட்டைக் கைவிடாத நேர்த்தி ஆகிய குணங்களாலும், சுயேச்சையான நடிப்புத் திறனாலும், பிற்போக்கான எளிய குடும்பத்தைச் சேர்ந்த வர்ஷா, தேசிய அளவில் புகழ்பெறும் தாரகை ஆகிறாள். இந்தப் பயணத்தில் அவள் அடையும் வேதனைகள், சோதனைகள், இழப்புகள், பெருமிதங்கள் அனைத்தையும்நுட்பமான சித்திரிப்புகளுடன் பதிவு செய்கிறார் ஆசிரியர். தேசிய நாடகப் பள்ளியில் பல்லாண்டு காலம் பணியாற்றிய அவரது அனுழுவம், புதினம் முழுவதிலும் மிளிர்கிறது. வலிந்து திணிக்காத, மென்மையான அவரது நகைச்சுவை உணர்வும் அடிக்கடி புன்னகைக்க வைக்கிறது. தங்கு தடையற்ற உயிரோட்டமான தமிழில் இப்புதினம் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். நன்றி: தினமணி, 31/8/2015.