எனது சுதந்திரச் சிந்தனைகள்

எனது சுதந்திரச் சிந்தனைகள், டாக்டர் நா. மகாலிங்கம், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை 14, பக். 136, விலை 75ரூ.

கோவை மாவட்டத்தைச் சார்ந்த நா. மகாலிங்கம் பல்வேறு தொழில்களில் வெற்றிக் கொடி நாட்டியவர். பல்வேறு கல்வி நிறுவனங்களை நிறுவி பலரது உயர்வுக்கு வலிகோலியவர். வள்ளலாரின் திருத்தொண்டர். பல சமய, சமூக அமைப்புகளில் இடையறாது பணிபுரிந்தும் உதவியும் வருபவர். அவரது கண்ணோட்டங்களின் தொகுப்பாக எனது சுதந்திரச் சிந்தனைகள் வெளியாகி இருக்கிறது. தனது அனுபவங்களின் வெளிப்பாடாக ஓம்சக்தி மாத இதழில் இவர் எழுதிய சில கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். நதிகள் இணைப்பு, சொட்டுநீர்ப் பாசனம், இருமொழிக்கொள்கை, பங்சாயத்துகளின் நிலைமை, மதச்சார்பின்மை, தேர்தல் நடைமுறைகள் எனப் பல விஷயங்களில் தனது கருத்தை ஆணித்தரமாக முன்வைக்கிறார். அரசியல், தொழில்துறை, வர்த்தகம் போன்ற துறைகளில் பன்முகப் பரிமாணம் கொண்டவராக இருப்பதால், எந்த விஷயத்தைப் பற்றியும் தெளிவான ஒரு கருத்தை துணிவுடன் சொல்ல இவரால் முடிகிறது. தான் கூறும் விஷயங்களை இறுதியாகக் கருதாவிட்டாலும் அதைச் சிறிதேனும் பரிசீலியுங்கள் என்பதே இவரது கருத்தாக இருக்கிறது. நமது தேர்தல் முறை குறித்துக் கூறும்போது நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகளுக்க ஒரே நாளில் தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார். அதற்கான காரணங்களை தர்க்கரீதியாக அடுக்கும் அவர் அமெரிக்காவில் தேர்தல் நாள் நிலையாக உள்ளதுபோல் நமது நாட்டிலும் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார். இத்தொகுப்பிலுள்ள 10 கட்டுரைகளும் எளிமையாக இருப்பதுடன் தேவையானவையாகவும் உள்ளன. நன்றி: தினமணி, 5/11/2012.  

—-

  தமிழ்க் கவிஞர்கள் வரலாறு, தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராய நகர், சென்னை 17, விலை 40ரூ.

வள்ளலார் ராமலிங்க அடிகளார், பாரதியார், நாமக்கல் கவிஞர் பாரதிதாசன், உடுமலை நாராயண கவி, கண்ணதாசன், சுரதா உள்பட 13 கவிஞர்களின் வாழ்க்கை குறிப்புகள் கொண்ட புத்தகம். வாழ்க்கைக் குறிப்பை ரத்தின சுருக்கமாக எழுதியுள்ளார் இரா. இளங்குமரனார். தமிழ் மண் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகத்தின் விலை 40ரூ. தமிழ் உணர்வைத் தூண்டும் வேறு சில நூல்களையும் தமிழ் மண் பதிப்பகம் குறைந்த விலையில் வெளியிட்டுள்ளது. தமிழர் வரலாற்றுச் சுவடுகள், ஆசிரியர் முனைவர் த. செயராமன், தமிழகத்தின் வரலாற்றை சுருக்கமாக கூறும் புத்தகம் விலை 50ரூ. தமிழுக்குத் தொண்டு செய்த தமிழீழ அறிஞர்கள், ஆசிரியர் இளங்குமரனார். இலங்கையில் பிறந்து, தமிழுக்கு அருந்தொண்டாற்றிய ஆறுமுகு நாவலர், சி.வை. தாமோதரப்பிள்ளை, நா. கதிரைவேற்பிள்ளை, விபுலானந்த அடிகள், தனிநாயக அடிகள் உள்பட 14 அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு கொண்ட நூல் விலை 50ரூ. தமிழக மொழிப் போர் ஈகிய வரலாறு, ஆசிரியர் செந்தலை ந.கவுதமன். 1983ம் ஆண்டிலும், 1965ம் ஆண்டிலம் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்தவர்கள் வரலாறு விலை 40ரூ. ஈழம் காக்க ஈகம் செய்த இனக்காப்பு மறவர்கள், ஆசிரியர் கவிபாஸ்கர், க. அருணபாரதி. இலங்கைத் தமிழர்களுக்காக உயித்தியாகம் செய்தவர்கள் பற்றி கூறும் நூல். விலை 60ரூ. நன்றி: தினத்தந்தி, 8/1/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *