கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள், வேளுக்குடி கிருஷ்ணன், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 216, விலை 115ரூ.
சகல புண்ணியங்களும் பெற வேண்டுமென்றால் பகவானின் திவ்ய நாமங்களைச் சொன்னாலே போதும் என்று புராணங்கள் கூறுகின்றன. அந்த வகையில் கண்ணன் நாமம் சொல்லும் க9தைகள் என்ற தலைப்பில் பல்வேறு அத்தியாயங்களை, மாருதியின் உயிரோட்டமான வண்ண ஓவியங்களுடன் தந்து விளக்கி இருக்கிறார் நூல் ஆசிரியர். கண்ணனைப் போற்றம் கதைகள் அனைத்தும் ஸ்ரீ கண்ணனக்கே உரிய குணங்களான சுறுசுறுப்பு, துறுதுறுப்பு, குதூகலம் ஆகியவற்றை எளிமையாக அனைத்துத் தரப்பு மக்களும் புரிந்து கொள்ளும்படி அழகுற எடுத்துரைக்கின்றன. இந்நூலின் 42 அத்தியாயங்களும் ஸ்ரீ கண்ணனின் புகழ் பாடுகின்றன. இறைவனது திருநாமங்களுக்க எத்தனை வலிமை என்பதை ஒவ்வொர் அத்தியாயமும் நன்றாக எடுத்துரைக்கிறது. பகவானின் திருநாமங்களைச் சொல்லிக்கொண்டே இருந்தால், மனதில் படர்ந்திருக்கும் இருள் மறைந்துவிடும், மெல்ல மெல்ல ஒளி ஊடுருவி, உள்ளுக்குள் வியாபிக்கத் தொடங்கிவிடும். காரணம் ஸ்ரீ கிருஷ்ணர் ஜோதி வடிவானவர் அல்லவா. அதை நயம்பட விளக்குகிறது இந்நூல். கேசவன், வாசுதேவா எனும் திருநாமங்களின் வலிமை என்ன? என்பதை அறிய விரும்புவோர் படிக்க வேண்டிய நூல் இது. மனிதன் மனிதனாக வாழ்வதற்கு இந்நூலைப் படித்தால் தெளிவு கிடைக்கும் என்பது உண்மை. அழகு கண்ணனை ஆராதியுங்கள், தூதனாக, கையாளாக, சாரதியாக உங்கள் வீட்டுக்கும் வருவான ஸ்ரீகண்ணன். உண்மையான அன்பும், ஆழ்ந்த பக்தியும் கொண்டு ஸ்ரீ கண்ணனை நெருங்கினால், நமக்கு அடங்குவான். நம்மில் வசமாவான். முயன்றுதான் பார்க்கலாமே என்று நினைப்பவர்கள் படித்துப் பயன் பெற வேண்டிய நூல்.. நன்றி: தினமணி, 2/2/2014.
—-
காற்றின் குரல்(அபூர்வ ராமாயணம்-தொகுதி 1), திருப்பூர் கிருஷ்ணன், திருப்பூர் குமரன் பதிப்பகம், 57பி, பத்மாவதி நகர், காமராஜ் சாலை, விருகம்பாக்கம், சென்னை 92, விலை 250ரூ.
கடலுக்குள் முத்துக்களும், பவளங்களும் மற்றும் பல ஜீவராசிகளும் மறைந்திருப்பதுபோல, ராமாயணத்தில் பல அற்புதமான சிறுகதைகள் புதைந்து கிடக்கின்றன. கடலில் மூழ்கி முத்தெடுப்பதுபோல் அந்தக் கதைகளை தேடி எடுத்து இலக்கியச் சுவையுடன் கூறுகிறார் எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன். பொதுவாக கைகேயி என்றால் பரதனின் தாய். ராமர் காட்டுக்குச் செல்ல காரணமாய் அமைந்தவள் என்று மட்டுமே பலரும் அறிவார்கள். முன்ஜென்மத்தில் அவள் கணவனை இம்சை செய்ததால் பேயாக மாறியவள். கடைசியில் ஒரு முனிவரின் அருளால் தேவலோகம் செல்கிறாள். தன்னுடைய ராமாவதாரத்தில் அவளை கைகேயியாக பிறக்கும்படி செய்தவர் மகாவிஷ்ணு. இப்படி வெளியே தெரியா பல விஷயங்கள், அருமையான சிறுகதைகளாக இந்த நூலில் ஒளிவிடுகின்றன. நன்றி: தினத்தந்தி, 8/1/2014.