மறைமலையடிகள் வரலாறு

மறைமலையடிகள் வரலாறு, மறை. திரு.நாவுக்கரசு, மறைமலையடிகள் பதிப்பகம், சென்னை 62, பக். 784, விலை 600ரூ.

தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படும் மறைமலையடிகளின் பிறப்பில் தொடங்கி (1876) அவரது பள்ளிப்படிப்பு, கல்லூரிப் படிப்பு, மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள், பாஸ்கர சேதுபதி, பாண்டித்துரை தேவர், ரா. ராகவையங்கார், வ.உ.சிதம்பரம் பிள்ளை, யாழ்ப்பாணம் ந.சி. கந்தையா, மயிலை சீனி. வேங்கடசாமி முதலிய அறிஞர்களோடு அவருக்கிருந்த தொடர்பு. அவர் எழுதிய ஆய்வு நூல்கள் போன்ற பல தகவல்களோடு அவரது இறுதிக்காலம் வரை (1950) நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் இந்நூலில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. தனது பதினைந்தாம் வயதில் முறைப்படி தமிழ் பயிற்சியைத் தொடங்கிய அடிகளார், தனது இருபத்தொன்றாம் வயதிற்குள் தொல்காப்பியம், திருக்குறள், திருச்சிற்றம்பலக் கோவையார், சிவஞான போதம், சிவஞான சித்தியார், நன்னூல் விருத்தி, தொல்காப்பிய சூத்திரவிருத்தி, யாப்பருங்கலக்காரிகை, தண்டியலங்காரம் முதலான பல தமிழ் நூல்களை முழுவதும் நெட்டு செய்துகொண்டதோடு அவற்றைப் பற்றி சிறந்த சொற்பொழிவுகளையும் ஆற்றியிருப்பது வியப்பளிக்கும் செய்தி. இவரது மாணிக்கவாசகர் காலம் தமிழின் குறிப்பிடத்தகுந்த ஆய்வு நூல். 1929இல் சித்தாந்தம் இதழில் சமயச்சீர்த்திருத்தம் என்ற தலைப்பில் இவர் எழுதிய கட்டுரை இந்நூலில் இடம்பெற்றிருப்பது தனிச்சிறப்பு. அடிகளார் எழுதிய நூல்களின் பட்டியல் இந்நூலில் இடம் பெறாதது ஒரு குறையே. நன்றி: தினமணி, 20/1/2014.  

—-

 

அக்கு பஞ்சர் சிகிச்சை முறைகள், தமிழ்நாடு கை கால் அக்குபஞ்சர் சிகிச்சை நிலையம், 4ஆ, 187, காளியம்மன் கோவில், கூத்தனூர், கவனூர் போஸ்ட், கூடுவாஞ்சேரி தாலுகா, காஞ்சீபுரம் மாவட்டம் 603203, விலை 300ரூ.

சிறிய ஊசிகள், விதைகள், காந்தக்கற்கள் இவைகளைப் பயன்படுத்தி, கைகளிலும் கால்களில் மட்டும் செய்யக்கூடிய அக்குபஞ்சர் மருத்துவ முறை கஜோக் என்று அழைக்கப்படுகிறது. இதனால் உடம்பில் எந்த பாகத்திலும் பிரச்சினைகள் இருந்தாலும் கை கால்களில் சிகிச்சை அளித்தே குணமாக்கிவிடலாம் என்கிறார் நூலாசிரியர் டாக்டர். ஆர். ரங்கராஜன். இந்த வைத்திய முறை பற்றிய முழு விவரமும் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 8/1/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *