என்மகஜெ
என்மகஜெ, மலையாளத்தில் அம்பிகாசுதன் மாங்காடு, தமிழில் சிற்பி பாலசுப்ரமணியம், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 288, விலை 200ரூ.
மலையாளச் சூழலியல் நாவல். மனச்சாட்சியை, அதிர வைக்கும் படைப்பு என்ற எச்சரிக்கை அறிவிப்புடன் ஆரம்பிக்கும், நாவலின் பக்கங்களை ஒவ்வொன்றாகப் படித்து செல்லுகையில், ஒரு மிகச் சிறந்த, தரமான புதினத்தைப் படித்து முடித்த நிறைவுடன், கண்களை மூடி சிந்திக்க ஆரம்பிக்கிறோம். பிரபஞ்சத்தின் ஐம்பூதங்களையும், நாசகார அறிவியல் வன்புணர்ச்சி செய்து கொண்டேயிருக்கிறது. தட்டிக் கேட்க யாருமில்லை என்ற துணிச்சலில் கைபேசிக் கோபுரங்களினால், குருவி இனத்தை டைனோஸருடன் சேர்த்து, அருங்காட்சியில் வைத்து பார்த்து மகிழும் கைபேசி பிரஜைகளல்லவா நாம். காடுகள், விலங்குகள் வாழ்விடம். காட்டு வாசிகளின் ஜீவாதார பூமி. அழிக்கிறோம். அழித்தக் கொண்டேயிருக்கிறோம். காற்றை விட்டு வைத்திருக்க்கிறோமா? கேரளத்துக் கல்லூரி பேராசிரியரின் நெஞ்சுள் புகுந்துவிட்ட இந்த சூழலியல் நாசம், கலை வடிவத்துடன் கூடிய அற்புதமான நாவலாக வடிவெடுத்திருக்கிறது. இதுபோன்ற அற்புதமான நவீனம் தமிழில் எழுதுபவர் இல்லையோ என்ற ஏக்கத்தை, சிற்பியின் தமிழாக்கப்பணி போக்குகிறது. இந்த நாவல் மொழி பெயர்ப்பு, ஒரு சவாலான பணி என்பதை நாவலைப் படிக்கையில் உணர்கிறாம், பிரமிப்பில் ஆழ்கிறோம். அம்பிகாசுதன் மாங்காடு, நாவலில் மிக அற்புதமாக இதிகாசக் கதாபாத்திரங்களை, அவர்களுக்கென உள்ள பிரத்யேகமான குணவிசேஷங்களை நயத்தக்க நாகரிகத்துடன் இணைத்து கதையை லாவகமாக வழி நடத்துகிறார். எண்டோஸல்பான் என்றொரு பூச்சி கொல்லி மருந்து, இயற்கை அன்னை கொலுவிருக்கும், கேரள பூமியின் ஒரு பகுதியை எப்படியெல்லாம சிதைத்து, சின்னாபின்னமாக்கி உயிரினங்களை உருக்குலைக்கிறது என்பதே நாவலின் மையக்கரு. ஆனால் அதற்கு மேல் நிறைய நிறைய. தமிழில் புதினம் வாசிப்பவர்களும், புதினம் எழுதுபவர்களும் அவசியம் வாசிக்கவேண்டிய அதிர வைக்கும் படைப்பு. காசர் கோட்டிலிருந்து தமிழகத்தில் நுழையும் தெள்ளிய தென்றல் காற்று. -ஜனகன். நன்றி: தினமலர், 9/2/2014.