என் வழி தனி வழி சச்சின் டெண்டுல்கர் சுயசரிதை
என் வழி தனி வழி சச்சின் டெண்டுகல் சுயசரிதை, தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், பக். 545, விலை 495ரூ.
உலகின் பல்வேறு கிரிக்கெட் மைதானங்களில் 22 கெஜ நீள ஆடுகளத்தில் 24 ஆண்டுகளாக கோலோச்சிய சச்சினைப் பற்றி, ரசிகர்களுக்கு என்னவெல்லாம் தெரியுமோ அவை எல்லாம் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இருந்தாலும் சின்னப் பயலே வீட்டிற்குச் சென்று பால் குடித்து விட்டு வா என்று சியால்கோட் மைதானத்தில் பாகிஸ்தான் ரசிகர்கள் ஏந்தியிருந்த வாசகம் உண்டாக்கிய அசௌகரியம், ஆரம்பத்தில் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் பந்துகளை சமாளிக்க முடியாமல் திணறியது, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் சதம் அடித்ததும் பேட்டை உயர்த்தி பாராட்டை ஏற்கக் கூச்சப்பட்டது என வெளி உலகுக்குத் தெரியாத, வீரர்களின் ஓய்வு அறையில் நடைபெற்ற பல சுவாரசியமான சம்பவங்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. சதத்தில் சதம் அடிப்பதற்கு பால்யத்தில் கைகொடுத்த ரமாகாந்த் ஆச்ரேக்கரின் கண்டிப்பான பயிற்சி, சைக்கிள் வாங்க முடியாமல் இருந்த வறுமை, அதை வெளிக்காட்டாது தனக்குப் பக்கபலமாக இருந்த தந்தை, அவர்இறந்தபோது மனமுடைந்தது, தாயின் சமையல், மும்பை விமான நிலையத்தில் மனைவி அஞ்சலியை முதன் முதலில் சந்தித்தது, மகள் சாரா, மகன் அர்ஜுன் பிறந்தபோது அருகில் இருந்து வீடியோ எடுத்தது, தொடர் போட்டிகள் காரணமாக அவர்கள் வளர்ச்சியை அருகில் இருந்து காண முடியாத ஏக்கம், முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரை தனது உண்மையான விமர்சகனாக இருந்த சகோதரன் அஜித் டென்டுல்கரின் தியாகம் என கிரிக்கெட் அல்லாத அந்தரங்க வாழ்வின் பக்கங்களும் படிக்க சுவாரஸ்யம். கிரிக்கெட் வீரனின் சுயசரிதை என்பதாலோ என்னவோ, தான் களமிறங்கும்போது அணியின் ஸ்கோர் என்னவென்பதில் இருந்து ஒவ்வொரு போட்டியையும் தெளிவான புள்ளி விவரங்களுடன் குறிப்பிட்டிருப்பதும் நல்ல முயற்சி. நன்றி: தினமணி, 25/5/2015.