எம்.ஜி.ஆருடன் எனக்கிருந்த தொடர்பு
எம்.ஜி.ஆருடன் எனக்கிருந்த தொடர்பு, ம.பொ. சிவஞானம், பக்கம் 160, பூங்கொடி பதிப்பகம், சென்னை – 4. விலை ரூ. 60
‘செங்கோல்’ வார இதழில் ம.பொ.சிவஞானம் ‘நானறிந்த கலைஞர்கள்’ என்ற தலைப்பில் எழுதிய தொடரின் நூல்வடிவம் இது. எம்.ஆர். ராதா, என்.எஸ். கிருஷ்ணன், கே.ஆர். ராமசாமி போன்ற கலைஞர்களைப் பற்றிக் குறைவாகவும், மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். பற்றிய தகவல்கள் அதிகமாகவும் எழுதப்பட்டிருக்கின்றன. ஒரு நடிகர் என்ற முறையிலும், ஓர் அரசியல்வாதி என்ற முறையிலும், நல்ல மனிதர் என்கிற முறையிலும் எம்.ஜி.ஆரின் நற்பண்புகளை மிகவும் சுவையாக விவரித்துச் செல்கிறார். ம.பொ.சி. மக்களவை மேலவைத் தலைவராக இருந்தபோது ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலைகளில் எம்.ஜி.ஆர் அவரிடம் நடந்து கொண்ட முறைகளை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்வது மனதைத் தொடுகிறது. எம்.ஜி.ஆரின் சமகாலத்தில் இருந்த பிற அரசியல் தலைவர்களின் பண்புகளோடு எம்.ஜி.ஆரின் பண்புகளை ஒப்பிட்டுச் சொல்லி எம்.ஜி.ஆரின் மேன்மையை எடுத்துக்காட்டுகிறார். பலரும் அறியாத பல புதிய தகவல்கள் நிரம்பிய சுவையான நூல்.
—
கன்னியாகுமரி மாவட்டம் அரசியல் – சமூக வரலாறு, தொகுப்பாசிரியர்: செ. தங்கமணி, பக்கம் 240, கன்னியாகுமரி மாவட்ட வரலாற்றுப் பேரவை, 33, உட்சு சாலை, சென்னை – 2. விலை ரூ. 200
கன்னியாகுமரி மாவட்ட வரலாற்றை பல்வேறு கோணங்களில் விவரித்துச் சொல்லும் நூல். கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியில் கி.மு. 4000 ஆண்டுகால தடயங்கள் கிடைத்துள்ளன. எனவே அக்காலத்திலேயே மக்கள் இப்பகுதியில் வாழ்ந்திருக்கின்றனர் என்கிறது இந்நூல். ஆய்நாடு, பண்ணை சமூக அமைப்பு முறை, சங்ககாலத்திலும் அதற்குப் பின்பும் குமரி மாவட்டத்தில் நடந்த போர்கள், மக்கள் உரிமை இயக்கங்கள், தோள்சீலைப் போராட்டம், தென் திருவாங்கூரில் கோயில் நுழைவுப் போராட்டம் என கன்னியாகுமரி மாவட்ட வரலாற்றின் பல பரிமாணங்கள் விளக்கப்படுகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் வழங்கி வரும் வேம்படி மாடன் கதை, பூலங்கொண்டான் கதை, வெங்கலராசன் கதை போன்ற நாட்டுப்புறக் கதைகளில் வரும் செய்திகளை ஆதாரமாகக் கொண்டு கன்னியாகுமரி மாவட்ட வரலாற்றை ஆராயும் கட்டுரையும் உள்ளது. குமரி மாவட்ட வரலாற்றை எழுதுவதில் உள்ள இடர்ப்பாடுகள், குமரி மாவட்ட வரலாற்றை எழுதியவர்கள் செய்த இருட்டடிப்புகள் பற்றியும் தெரிந்துகொள்ள முடிகிறது. தென் எல்லை மீட்புப் போராட்ட வரலாறு விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இவற்றுடன் கூட, குமரி மாவட்டத்தில் வழங்கும் அருந்தமிழ்க் கலைச் சொல் பற்றிய ஆராய்ச்சி, நூலுக்குச் சிறப்பு சேர்க்கிறது. நன்றி: தினமணி 23-01-12