ஏணிகள் தோணிகள் ஞானிகள்

ஏணிகள் தோணிகள் ஞானிகள், கோ.மணிவண்ணன், திருமகள் நிலையம், பக். 296, விலை 190ரூ.

கீழிருப்பவரை மேலே உயர்த்தப் பயன்படுவது ஏணி. ஆழ நீர்நிலையைக் கடக்க உதவுவது தோணி. இவ்விரண்டுமே பயனாளிகளுக்காகக் காத்திருக்கின்றன. பயனாளிகள் இவற்றைத் தவிர்த்தால் நஷ்டம் ஏணிகளுக்கும் தோணிகளுக்கும் அல்ல. இவ்விரு சாதனங்களின் மானுட வடிவமாகத் திகழ்பவர்கள்தாம் ஞானிகள். திருநாவுக்கரசர், வள்ளலார், ரமணர், மகாகவி பாரதி, சங்கரர், ராமானுஜர், சைதன்யர், ராமகிருஷ்ணர், விவேகானந்தர், அரவிந்தர் எனத்தொடரும் அந்த அருளாளர் பரம்பரையின் நோக்கம், மானுட மேம்பாடு மட்டுமே. நூலாசிரியர், ‘பாபாஜி சித்தர் ஆன்மிகம்’ இதழில் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பு இது. கட்டுரையின் முடிவுப் பகுதிகளில் தூண்டில்களைத் தொங்கவிடுவதில், நூலைத் தொடர்ந்து படிக்க வைக்கும் நூலாசிரியரின் ஆர்வம் புலப்படுகிறது. ‘எந்தரோ மகானுபாவலு’ என்று பாடிய தியாகராஜரின் அடியொற்றி, பக்கத்துக்குப் பக்கம் ஞானியரின் வாழ்வியல் நிகழ்வுகளையும், அவர்களது உபதேசங்களையும் கற்கண்டைத் தூவுவதுபோலத் தூவிச் செல்கிறார் ஆசிரியர். நமது மனமும் எறுப்புபோல நூலின் பக்கங்களைப் புரட்டியபடி தொடர்கிறது. ஆன்மிகம் என்பது மனதைப் பண்படுத்தும் மார்க்கம். அதற்கு உதவும் படிக்கல்லாக எளியநடையும், அரிய உதாரணங்களும் கலந்ததாக இந்த இனிய நூல் விளங்குகிறது. நன்றி: தினமணி, 4/1/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *