ஏன் இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும்

ஏன் இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும்?, ஓஷோ சித், ஓஷோ சாஸ்வதம், 3/184, கந்தம்பாளையம், அவினாசி 641654, விலை 200ரூ.

ஓஷோ ரஜினீஷ் பேசியும் எழுதியும் வெளியான 600 புத்தகங்களில் 10க்கும் குறைவானவையே காமத்தைப் பற்றியவை. ஆனால் அவையே அவரது அடையாளமாகப் பரப்பப்பட்டன. உண்மையில் ஓஷோவின் தனித்தன்மை என்பது தர்க்கம். அமெரிக்கா முதல் கம்யூனிஸ்ட்கள் வரை, மகாவீரர் தொடங்கி போப் ஆண்டவர் வரை அனைத்தையும் தன்னுடைய விமர்சன அம்புகளால் ஓட்டை போட்டார் ஓஷோ. இத்தகைய ஓஷோவின் வழித்தடம் அவருக்குப் பின்னால் தொடரவில்லை என்பதே உண்மை. அவரைப் போன்றே பேச ஆரம்பித்த மகான்கள் இன்னமும் மனம் என்ற ஒரு விஷயத்தையே தாண்டவில்லை. அதை தாண்டுவதற்கும் அவர்களுக்கு மனம் இல்லை. இவர்களில் கொஞ்சம் வித்தியாசமானவர் சித்தார்த்தன். ஓஷோ சித் என்று அறியப்படும் சித்தார்த்தன், ஓஷோ தியான மையத்தை 1982ல் தொடங்கியவர். 10 ஆண்டுகள் பூனா ஆஷ்ரமத்தில் இருந்தவர். ஓஷோ எதிர்காலத்தில் ஒரு புதிய மனிதனை உருவாக்க நினைத்தார். ஜோர் புத்தா மனிதன் என்று அதற்குப் பெயரும் இட்டார். வெறும் சட்ட திட்டங்களைப் பின்பற்றும் கருத்தக் குருடனாக இல்லாமல், வாழ்க்கையைக் கணத்துக்குக் கணம் விழிப்பு உணர்வோடு வாழபவனாக அவன் இருக்க வேண்டும் என்று நினைத்தார். அத்தகைய மனிதனை உருவாக்குவதற்காக எழுதப்பட்ட புத்தகம் இது. நான் பார்த்த நான் அனுபவப்பட்ட உணர்வுகளில் இந்தியர்களாகிய நமக்கு உள்ள ஒரு தவறான உணர்வு நமது அடிமைத்தனமும் மூடநம்பிக்கையும்தான் என்று சொல்லும் ஓஷோ சித், அமெரிக்காவுடன் இந்த அரசு செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை இந்திய அடிமை நோயின் வெளிப்பாடு என்கிறார். அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு அடிபணிந்து போவதைத் தவரி வேறு வழிகளை ஏன் காங்கிரஸ் யோசித்துப்பார்க்கக்கூமடாது என்றும் கேள்வி எழுப்புகிறார். மனவளக் கலை, தியானம் போன்றவை இன்று கரன்ஸி மெஷின்களாக மாறிவருகின்றன. மனதை வளப்படும் கலை ஓர் இயக்கமாகச் செயல்படுவதற்கு நான் எந்த எதிர்ப்பும் சொல்லவில்லை. ஆனால் இதை ஆன்மிகம் என்று விற்பது பச்சைத்துரோகம். தியானமுறை என்பது மருந்துதான். ஆனால் மக்களின் நோயை அறியாமல் அதே மருந்தை சர்வரோக நிவாரணி என்று சொல்லி விற்பது சரியா? என்று கேள்வி எழுப்புகிறார். அரசியல் முதல் மதங்கள் வரை நடக்கும் அனைத்து வியாபாரங்களும் இவரால் கேள்வி கேட்கப்படுகின்றன. இயற்கையைப் புறந்தள்ளிய சமூக அமைப்பை நோக்கி நாம் நகர்ந்து வருகிறோம். செக்ஸ், பசி, பயம் ஆகிய மூன்று மட்டுமே இன்னமும் மனிதனை இயற்கையோடு இணைத்து வைத்துள்ளது என்று சொல்லும் ஓஷோ சித் இயற்கையோடு இணைந்து வாழுங்கள் என்பதையே திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார். ஒரு நதி வரைபடத்தைப் பார்த்து வழி கண்டுபிடித்து கடலை அடைவது இல்லை. பறவைகள் கருவியால் இடம் கண்டு கூடு கட்ட வருவது இல்லை என்று சொல்லப்படும் உதாரணங்களே சுடுகிறது. அதற்காகவே இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும். -புத்தகன். நன்றி:ஜுனியர் விகடன், 4/11/2012.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *