ஏற்றம் தரும் மாற்றம்
ஏற்றம் தரும் மாற்றம், வீ. அரிதாசன், தலைமுறை பதிப்பகம், சென்னை 32, பக். 160, விலை ரூ. 170
ஒரு பொருளை அதன் இயல்பான நிலையிலேயே விற்பனை செய்தால், விற்பனை வாய்ப்பு குறைவாகவே இருக்கும். அந்தப் பொருளுக்குள் புதிய பண்பை, உள்ளடக்கத்தைச் சேர்த்து அதன் மதிப்பைக் கூட்டினால் அதை வெற்றிகரமான விற்பனை செய்து லாபமீட்ட முடியும் என்பதை விளக்கும் நூல். சாதாரணத் தேனை விட தும்பைத் தேனுக்கும், சூரியகாந்திப் பூத் தேனுக்கும், மாந்தேனுக்கும், ஏலக்காய்த் தேனுக்கும் மதிப்பு அதிகம் உள்ளதல்லவா? இவ்வாறு மதிப்பூக்கூட்டும் முறையில் பல பொருள்களை மாற்றி விற்பனை செய்து வெற்றி பெற்ற பலரின் அனுபவங்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. முயற்சியும் பயிற்சியும் தொடர்ச்சியாக இருந்தால் எளிய மனிதனும் சாதனை மனிதனாக மாற முடியும் என்பதை நூல் ஆசிரியர் சந்தித்த மனிதர்கள் மூலம் நம்மால் உணர முடிகிறது. நெல்லி, வெட்டிவேர், கற்றாழை என இயற்கையாகக் கிடைக்கும் பல்வேறு பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்தி வெற்றியடைந்த பலரது அனுபவங்களை இடம் பெற்றுள்ள இந்த நூல், புதிதாக தொழில் தொடங்க முன்வரும் இளைஞர்களுக்கு ஒர் உத்வேகத்தை அளிக்கும் என்பதை மறுக்க முடியாது. இந்தியாவுக்கு உரித்தான பல மருத்துவக் குணம் கொண்ட பொருள்கள் தங்கள் நாட்டுடையது என காப்புரிமை பெற துடிக்கும் சர்வதேச நாடுகளுக்கு நாம் வாய்ப்புத் தராமல் அவற்றை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்தினால் நாமும், நமது நாடும் பொருளாதாரீதியில் முன்னேறும் என்பதை உணர்த்தும் நூல். நன்றி: தினமணி, 23/12/13.