பாப்லோ நெரூடா நினைவுக்குறிப்புகள்
பாப்லோ நெரூடா நினைவுக்குறிப்புகள், தமிழில்-சா.தேவதாஸ், கருத்து பட்டறை, 2, முதல் தளம், மிதேஷ் வளாகம், 4வது நிறுத்தம், திருநகர், மதுரை 6, விலை 380ரூ.
யதார்த்தமில்லாத கவிஞன் இறந்தவன் ஆவான். யதார்த்தம் மட்டுமேயுள்ள கவிஞனும் இறந்தவன் ஆவான். அறிவுக்கப் புரியாத வகையில் எழுதும் கவிஞர்களின் கவிதைகள் அவர்களுக்கு மட்டுமே புரியும். இது மிகவும் வருந்தத்தக்கது என்ற வரிகளுக்கு சொந்தக்காரர் பாப்லோ நெரூடா. உலகப் பொதுவுடைமை இயக்கத்தின் உன்னதக் கவிஞன் என்று பாராட்டுப் பெற்ற காலகட்டத்திலேயே, பகைவனுடனும் ஒத்துழைக்க விரும்பும் அமெரிக்க ஆதரவு திரிபுவாதி என்று கம்யூனிஸ்ட்களால் கொச்சைப்படுத்தப்பட்ட கவிஞர் நெரூடா. துதரகங்களில் வேலை பார்த்ததால் உலக அரசியலைத் துல்லியமாக அறிந்து, மார்க்சியமே மானுட விடுதலையின் மருந்து என்று உணர்ந்த செயல்பட்ட சிலி நாட்டின் இடதுசாரிக் கவிஞர். அவரது நினைவுக்குறிப்புகள் இவை. நெரூடாவின் கவிதைகள் தமிழுக்கு வந்து பல ஆண்டகள் ஆகிவிட்டன. ஆனால் இந்த வரலாற்றுக் குறிப்புகள் முதன்முதலாக வந்துள்ளன. நெரூடாவின் கவிதைகளை வாசிக்கும் அனுபவத்தையும் இந்த நினைவுக் குறிப்புகளும் கிடைத்திருப்பது சா.தேவதாஸின் மொழி ஆளுமையைக் காட்டுகிறது. ஒரு கவிஞன் சதா கவிதையை படைத்துக்கொண்டு மட்டுமே இருப்பவன் அல்ல. ஒரு கம்யூனிஸ்ட் எப்போதும் வர்க்க பேதம் பேசிக்கொண்டே இருப்பவனும் அல்ல… என்பதற்கு உதாரணமாக நெரூடா இருக்கிறார். அவருக்கு பொம்மைகளைச் சேகரிக்கப் பிடிக்கிறது. நத்தைகளையும் கிளிஞ்சல்களையும் ரசிக்கிறார். இப்படிப்பட்ட குழந்தை மனோபாவம் கொண்ட நெரூடாவைத்தான் சிறை பிடிக்கிறார்கள். நாடு கடத்துகிறார்கள். ஒதுக்கி வைக்கிறார்கள். எப்போதும் கண்காணிப்பிலேயே வைக்கிறார்கள். ட்ராட்ஸ்கி கொலையில் இவருக்கு பங்கு உண்டு என்று பழியும் போடுகிறார்கள். அனைத்தையும் தாண்டி உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று பேசகிறார். கவிதை வாசிக்கிறார். கலந்துரையாடல் செய்கிறார். நோபல் பரிசையும் பெறுகிறார். சோவியத் விருதுப் பட்டியலில் நெரூடா பெயர் ஏன் இல்லை? என்று ஸ்டாலினையும் கேட்க வைக்கிறார். சிலருக்கு அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பங்கள் வெகு சீக்கிரமாக அவர்களாலேயே சிதைக்கப்பட்டுவிடும். ஆனால் நெரூடா, இறப்புக்குப் பிறகும் உணர்ந்துகொண்டே சென்றதற்குக் காரணம், எந்த லட்சியத்தைப் பேசினாரோ அந்த லட்சியத்துக்காகவே உண்மையாக இருந்தார். தனிமனித வாழ்க்கையிலும் உண்மையைக் கடைப்பிடித்தார். தனக்குள் இருந்த எதிர்மறைப் போக்குகளை மறைக்காமல் எழுதியும் இருக்கிறார். மரணப் படுக்கையில் இருந்தபோதும், அவரை சி.ஐ.ஏ. விடாமல் துரத்தியது. நெரூடாவின் வீட்டுக்குள் ராணுவம் நுழைந்தபோது சிரித்துக்கொண்டே சொன்னார்- நாலாப் பக்கமும் பாருங்கள். உங்களுக்கு அபாயகரமான ஒரே ஒரு பொருள்தான் இங்கே இருக்கிறது. அதாவது கவிதை என்றார். ஆம் இன்றுவரை அவரது கவிதை அடக்குமுறையாளர்களுக்கு அபாயகரமான பொருள்தான். அப்படிப்பட்ட நெரூடாவின் முழு வாழ்க்கையையும் அழகான மொழி நடையில் உணர்த்துகிறது இந்தப் புத்தகம். -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 8/12/13.