வள்ளலார் ஆராய்ந்த தந்தைத் தமிழ் மொழி

வள்ளலார் ஆராய்ந்த தந்தைத் தமிழ் மொழி – புலவர் அடியன் மணிவாசகனார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை 98, பக், 116, விலை 90ரூ.

தமிழ் மொழியின் தொன்மை, அதன் வளம் பற்றி பல்வேறு அறிஞர்களின் கருத்துகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அத்தனை தமிழனும் தன் அடையாளமான தாய்த் தமிழில் பேசுகின்றானா? எழுதுகின்றனானா? இல்லையே என கோமும் கொள்கிறது. தமிழின் தமிழோடு வாழ்கிறானா என்பதே இப்புத்தகத்தின் உபதலைப்பு. 11 அத்தியாயங்களைக் கொண்ட இப்புத்தகத்தில் வள்ளலார் ஆராய்ந்த தமிழொளி என்ற 2வது அத்தியத்தில் தமிழ் எண்ணிக்கையளவில் சுருக்கம், எழுத்துகள் கூடிப்புணரும் நிலை மிகவும் எளிமை. எழுதவும், கவிதை புனையவும் நேரிய தன்மை, எழுத்தொலி ஆரவாரம், சொல்பகட்டு முதலிய பெண்மையணி ஒப்பனை இல்லாமை, இப்படியான பண்புகளோடு, வேறு எந்த மொழியின் யாப்பு இலக்கணத்தையும் தன் மொழிக்குள் அடக்கியாளுகையால் தமிழ் மொழி ஆண்மை பொருந்தியது ஆகும் என வள்ளலார் நிறுவுகிறார். அதனால் தமிழ் மொழி தந்தை மொழியாகிறது. நாட்டுப்பற்று, மொழிப்பற்று என்பவை பயன்பாட்டு அளவில் இருக்கும் போது எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் உணர்ச்சிவசப்படும்போது அது, பிற நாட்டினர் மீது பிறமொழி பேசுவோர் மீதான துவேஷமாக வன்முறையாக மாற வாய்ப்புண்டு. தாய் மொழியில் பேசுவதை கல்வி கற்பதை வலியுறுத்துவது இன்றைக்கு அவசியமான ஒன்றாக இருந்தாலும், அறிவுப்பூர்வமாக அதை உணர்த்துவதே சிறந்ததாக இருக்கும். மொழி, அதன் வளம், அம்மொழியைப் பேசும் மக்களின் கலாசாரம், வரலாறு, கலை, உள்ளிட்டவை குறித்த ஆழ்ந்த ஈடுபாடும், விஞ்ஞான ரீதியான அணுகுமுறையும் வேண்டும். மேலும் நவீன உலகின் போக்கு, சிந்தனை, கலை, இலக்கியம் குறித்த தொடர்ந்த தேடுதலும், தமிழில் அவற்றை நிரப்ப வேண்டும் என்ற ஆர்வமும் இருக்க வேண்டும். அதுதான் ஒரு மொழியை அழியாமல் காப்பதற்கும், அதன் வளத்தைக் கூட்டுவதற்கும் சிறந்த வழிமுறையாக இருக்கும். இல்லையென்றால் அது வெறும் வழிபாடாகவே முடிந்துவிடும். நன்றி: தினமணி, 23/12/13.

Leave a Reply

Your email address will not be published.