ஒரு சாமானியனின் நினைவுகள்
ஒரு சாமானியனின் நினைவுகள், க. இராசாராம், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 250ரூ.
தமிழ்நாட்டின் மிக முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் க. இராசாராம். சட்டசபை சபாநாயகராகவும், அமைச்சராகவும் இருந்தவர். தி.மு.க.வில் இருந்தாலும், அ.தி.மு.க.வில் இருந்தாலும் காங்கிரஸ் உள்பட எல்லா கட்சிகளிலும் அவருக்கு நண்பர்கள் உண்டு. தமது அனுபவங்கள் பற்றி அவர் எழுதிய கட்டுரைகள், ஒரு சாமானியனின் நினைவுகள் என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது இதில், பல முக்கியமான அரசியல் நிகழ்ச்சிகள் மூடி மறைக்கப்படாமல் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் நடந்த நிகழ்ச்சிகள், அவர் மறைவைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்கள், அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு, அதைப்போக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இவற்றை எல்லாம் ஆதார்பூர்வமாக எழுதி இருக்கிறார். தமிழக அரசியல் பற்றி அறிந்து கொள்ள அரியதோர் புத்தகம்.
—-
தங்கர்பச்சான் கதைகள், உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18, விலை 210ரூ.
தமிழகத் திரை உலகின் மிகச்சிறந்த டைரக்டராகவும், ஒளிப்பதிவாளராகவும் விளங்குபவர் தங்கர்பச்சான். தமிழ்ப்படங்களை உலகத்தரத்துக்கு உயர்த்தியதில் இவருக்கு கணிசமான பங்கு உண்டு. எனினும், திரை உலகில் தன்னுடைய சாதனைகள் குறித்து இவர் கர்வமோ, மகிழ்ச்சியோ கொள்வதில்லை. நான் ஓர் எழுத்தாளன் என்று கூறிக்கொள்வதில்தான் இவர் பெருமை அடைகிறார். ஒன்பது ரூபாய் நோட்டு முதலிய நாவல்கள், இவர் சிறந்த இலக்கியவாதி என்று நிரூபித்து இருக்கின்றன. புதிதாக வெளிவந்துள்ள தங்கர்பச்சான் கதைகள் என்ற நூல், அவருடைய இலக்கிய ஆற்றலுக்கு ஓர் எடுத்துக்காட்டு. ஒவ்வொரு கதையும் ஒரு சினிமாவுக்கு சமம். ஒருசில கதைகள் உலக சினிமாவுக்கு சமம். நன்றி: தினத்தந்தி, 22/1/2014.