ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள்
ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள், கருணாகரன், கருப்பு பிரதிகள், பி55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 80ரூ. வாழ்வின் தீராத் துயர், 35 ஆண்டுகளாக எந்த சுகத்தையும் காணாத ஈழ வாழக்கை இரத்த சாட்சியமாய் ஒரு கவிதை நூல். வன்னியின் கொடூர யுத்தத்தில் உயிர் காக்க போராடிய தமிழ் ஜீவன்களின் அவலத்தை, கண்ணீரை, கவிஞர் கருணாகரன் வன்னி போர் முனையிலிருந்து எழுதிய கவிதைகள் கைவிடப்பட்ட மக்களின் ஆன்மாவாக நம்முடன் பேசுகின்றன. நிரந்தரமாக இப்பொழுதும் வன்னியில் வசிக்கும் கருணாகரனே ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள் என்று இப்படி ஒரு நூலை எழுத வேண்டியது காலத்தின் நிர்பந்தம். அடிப்படையில் எந்த சுகத்தையும் அந்த மக்கள் கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக காணவில்லை என்பதையே புலிகளின் காலத்திலும் மக்கள் சந்தித்த நெருக்கடியை இவர் பதிவாக்கியிருப்பது காட்டுகிறது. இது மனித பேரவலம் இல்லாமல் வேறென்ன? பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது இரவு பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது பகல் பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது காலை பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது மாலை பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது நிலம் பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது வாழ்க்கை வேறு எப்படி சொல்லி விளங்கப்படுத்த முடியும் அந்த மிக கேவலமான மனித அவலத்தை? இதை விடுத்து எப்படிச் சொல்லமுடியும்? 2007ஆம் ஆண்டுக்கு 2009ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட ஈழப் போரின் இறுதிக்காலத்தில் எழுதப்பட்ட கவிதைகள் இவை. பக்கங்கள் மொத்தம் 53. ஆனால் ஒட்டுமொத்த துயரமும் இதில் வடிக்கப்பட்டது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன இந்தக் கவிதைகள். கண்ணீர், குருதி, சாவோலம், கையறுநிலை, தண்டனை, குற்றம், அதிகாரம் என மனிதவாழ்வுக்கெதிரான அத்தனை நிலைகளையும் தமிழர்கள் கடந்தார்கள். தேவையில்லாமல் பொது மனித வாழ்வில் இந்த அவலங்கள் திணிக்கப்பட்டன. போக முடியாத ஊருக்கு வழிதேடி அலைக்கழிக்கப்பட்டார்கள். வாழக்கிடந்த நாட்களைச் சிலுவையிலறைதல் மாபெரும் குற்றம் என்பதை உணர்ந்தவேளையில் நின்றென் தண்டனையின் முள் முனையில் காலத்தின் படிக்கட்டுகளில் கசிந்து கொண்டிருக்கும் குருதியெங்கும் துரோகத்தின் மணம். இவ்வாறுதான் இருந்தது காலம். நம்பிக்கையின் சிதைவும் விசுவாசத்தின் முறிவும் கருணாகரனின் கவிதைகளில் உணர்வுகளாக வந்துபோகின்றன. ஈழப்போர் இலக்கிய பரப்பில் 1991லிருந்து தொடர்ச்சியாக செயல்பட்டு வருகின்ற ஒரு இலக்கிய ஆளுமை கவிஞர் கருணாகரன், கலை இலக்கிய செயல்பாட்டாளராக, கவிஞராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அவரை சிலர் புலி என்றார்கள். சிலர் புலி எதிர்ப்பாளர்கள் என்றார்கள். இவை எல்லாவற்றையும் தாண்டி மக்கள் கவிஞராக அவர் இருக்கிறார். அவர்கள் எங்கோ சென்றனர் என்னவாகவோவாயினர் சென்றபின்னும் செல்லமுடியா நிழல் உறைந்துள்ளது. இதனை கருணாகரன் மிகுந்த மன உழைச்சலோடுதான் பதிவிடுகிறார். யுத்தம் முடிந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் கொடூரத்தின் நிழல் பின் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது. எந்த சமரசத்தோடும் எந்த அரசியலோடும் இணைய, சிங்களர்கள் விடுவதாயில்லை. இதனை உரத்து சொல்வதென்றால் அவன் ஒரு அகதியாகத்தான் இருக்க வேண்டும். வன்னியில் இருந்து உயிரோடு இருக்க ஆசைப்பட்டுக் கொண்டு இப்படி கவிதைகளைக்கூட கொண்டுவர முடியாது. ஆனால் கருணாகரன் கொண்டுவந்திருக்கிறார். எல்லா தெய்வங்களும் கைவிட்ட தேசத்தின் மக்கள் இவர்கள். ஆழமான பிளவுகள் வழிநெடுக வந்து கொண்டே இருக்கின்றன. தப்பித்துக்கொள்ள எந்த வழி இருக்கிறது? எதிர்கொள்ள திராணியற்ற சாதாரண மக்களை ஏன் வாட்டி எடுக்கிறது அரசாங்கம். புலிகளால் முஸ்லிம் மக்கள் வடக்கிலிருந்து விரட்டப்பட்டு 23 ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னும் அவர்களின் துயரம் தொடர்வதை, இம்முறை கைதிகளானோம் நாமெல்லாம் பாங்கொலியில்லா விதியாற்றிய முன்னை வினைசூழ் காலத்திருள் வந்து முன்னே விரிகிறது சர்ப்ப வியூகமாய் என்று பதிவிடுகிறார் நூலாசிரியர். தமிழீழமா, உயிரா என்ற கேள்வி வந்தபோது வன்னி மக்கள் உயிரோடவது வாழ்வோம் என்று நினைத்தனர். மனைவியின் தாலியை மகளுக்கு அணிவித்தான் பிள்ளையை காப்பதற்கும் போர்க்களத்தில் இருந்து மீட்பதற்குமாக ஒரு தாயாக, தந்தைக்கே மனைவியாக மாறினாள் மகள். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் மனப்பதிவான இந்தக் கவிதைகள் ஈழத்தமிழரின் இரத்த சாட்சியாய் இருக்கின்றன. நன்றி: இந்தியாடுடே, 28/8/2013.