கச்சத்தீவு
கச்சத்தீவு, ஆர். முத்துக்குமார், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 10/2 (8/2) போலீஸ் குவாட்டர்ஸ் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 100ரூ. To buy This Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-266-6.html
1480ஆம் ஆண்டு கடல் கொந்தளிப்பு காரணமாக உருவான சின்னஞ்சிறிய தீவான கச்சத் தீவு 1685 முதல் ராமநாதபுரம் ஜமீனுக்கு சொந்தமாக இருந்ததையும், அதன் பின் எந்த எந்த ஆண்டுகளில் யாருக்கெல்லாம் குத்தகைக்கு விடப்பட்டு, பின்னர் தமிழக அரசியல்வாதிகளின் எதிர்ப்பார்ப்பையும் மீறி மத்திய ஆட்சியாளர்களால் இலங்கைக்கு எவ்வாறு தாரை வார்க்கப்பட்டது என்பது உள்பட அனைத்து தகவல்களையும் ஆதாரங்களுடன் தந்து இருக்கிறார் ஆசிரியர். எந்த அரசியல் கட்சியின் சாயலும் இல்லாமல், பிரச்சினைக்கு காரணம் என்ன என்ற வரலாற்றை ஆவணப்படுத்தும் உண்மையான நோக்குடனும், அதற்கான தீர்வு என்ன என்பதையும், கச்சத்தீவு பிரச்சினையால் தமிழக மீனவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் அழகாக சொல்லி இருக்கிறார். கச்சத்தீவு தொடர்பாக இந்தியா இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை பின் இணைப்பாக கொடுத்து இருப்பது கூடுதல் சிறப்பு. இந்த நூல் மூலம் கச்சத்தீவு பற்றி முழுமையாக அறிந்துகொள்ளலாம். நன்றி: தினத்தந்தி, 21/8/2013.
—-
விளம்பர உலகம், எஸ்.எல்.வி. மூர்த்தி, விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 160, விலை 80ரூ- To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-862-9.html
இக்காலத்தில் விளம்பரம் இன்றி ஓர் அணுவும் அசையாது. விளம்பரங்களைப் பற்றிய நிறைய தகவல்களோடு வெளிவந்திருக்கிறது இந்நூல். விளம்பரங்களின் தோற்றம், வளர்ச்சி, திட்டமிடுதல், வெளியிடுதல், ஓவியம், போட்டோகிராபி, நடிப்பு, புள்ளிவிவரம், உலகை கலக்கிய விளம்பரங்கள், இந்திய சந்தையில் கொடிகட்டி பறந்த விளம்பரங்கள் என்று பக்கங்கள் நம் கண்முன்னால் படபடத்து பறக்கின்றன. அமுல் விளம்பரத்தில் கொழு கொழு மொழு மொழு சுட்டிப்பெண், ஏர் இந்தியா மஹாராஜா, ஏஷியன் பெயிண்ட்ஸ் கட்டூ, சர்ஃப் பவுடர் லலிதாஜி, ஒனிடா பிசாசு என்று நமக்கு தெரிந்த விளம்பர அடையாளங்களின் தெரியாத பல சுவாரஸ்யமான கதவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. பல்வேறு ஊடகங்களின் மூலமாக, விளம்பர உலகம் எப்படி வளர்ந்து வந்திருக்கிறது என்பதை தெளிவாக விளக்கி இருக்கிறார் இந்நூலின் ஆசிரியர். விளம்பர ஏஜென்சிகளை எப்படித் தேர்ந்தெடுப்பது? எந்தப் பொருளுக்கு எந்த நடிகரை மாடலாக நடிக்க வைப்பது? எந்த சீசனில் எந்த ஊடகத்தில் விளம்பரம் செய்யலாம்? என்று புத்தகம் முழுவதும் விளம்பரம் பற்றிய அனுபவ அறிவு, களஞ்சியமாகக் கொட்டிக் கிடக்கின்றன. விளம்பரத்துறை பற்றித் தெரியாதவர்கள்கூட மிக எளிதில் புரிந்து கொள்ளும்வகையில் இப்புத்தகம் வெளிவந்திருப்பது இதன் தனிச்சிறப்பு. நன்றி: தினமணி, 30/6/2013.

