பட்டினப்பாலை ஆராய்ச்சி
பட்டினப்பாலை ஆராய்ச்சி, மகாவித்வான் ஆர். ராகவையங்கார், செண்பகா பதிப்பகம், பக். 102, விலை 50ரூ.
மிகச் சிறந்த ஆராய்ச்சி அறிஞரும் தமிழ், வடமொழி, ஆங்கிலப் மொழிப் புலமை மிக்கவரும், செய்யுளியற்றல், உரைநடை வரைதல், துருவியாராய்தல், நிரல்படக் கோவை செய்தல், இனிய செற்பொழிவாற்றுதல் என்று, பல்வேறு ஆற்றல் உடையவரும் ஆன, ராகவையங்கர் தமிழுலகம் போற்றும் மாமேதை. அவரது பழைய நூல் புதுப்பொலிவுடன் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. பட்டினப்பாலை தமிழின் தொன்மை இலக்கியங்களான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று. கடியலூர் உருத்திரங்கண்ணனார் எனும், புலவரால் பாடப் பெற்றது இந்நூல். இவர் தம் ஆய்வின்படி, பொருநராற்றுப் படைத் தலைவன் கரிகாலன் என்றும், பட்டினப்பாலைத் தலைவன் திருமாவளவன் என்று நாம் அறியமுடிகிறது. இருவரும் ஒருவர் அல்லர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நச்சினிர்க்கினியர் உரையை மறுத்தும் சிலவிடங்களில் துணிந்துரைக்கும் பாங்கு சிறப்பாக உள்ளது. புலவர் பெருமக்களும், ஆய்வு நாட்டம் உடையவர்களும் முன்னரே இந்நூல் கற்றவரும்கூட மீண்டும் படித்துப் படித்துப் பயன் அடையத்தக்க நூல். -கவிக்கோ ஞானச்செல்வன்.
—-
குறிஞ்சி மலர், தீபம் நா. பார்த்தசாரதி, கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, பக். 480, விலை 200ரூ.
இந்த நாவலைப் படித்துவிட்டு, சிலிர்ப்படைந்த பல தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அரவிந்தர் என்றும், பெண் குழந்தையாய் இருந்தால், பூரணி என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தது உண்டு. அந்த அளவுக்கு நாவலின் கதாநாயகன் அரவிந்தனையும், கதாநாயகி பூரணியையும் சிறப்பாகச் சித்தரித்திருந்தார் ஆசிரியர். இது ஒரு உரை நடைக் காப்பியம். ஒவ்வொரு தமிழனும் ரசிக்க வேண்டிய உன்னத உயிர் ஓவியம். -எஸ். குரு, நன்றி: தினமலர், 18/8/2013.