மரணத்தின் பின் மனிதர் நிலை

மரணத்தின் பின் மனிதர் நிலை, மறைமலையடிகள், நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டிபஜார், தி.நகர்,சென்னை 17, பக். 192, விலை 90ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-701-7.html

மறைமலையடிகள் என்று தமிழறிஞர்களால் அழைக்கப்படும் இந்நூலாசிரியர், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த மறைத் திரு சுவாமி வேதாசலம் ஆவார். அன்றைய காலகட்டத்தில் தமிழுக்கு இவர் ஆற்றிய தொண்டு இப்போதும் பலரால் பாராட்டப்படுகிறது. இவர், மரணத்திற்குப் பின் மனிதர் நிலை என்ன என்பதை இந்நூலில் விளக்கியுள்ளார். கடவுளும் இல்லை. ஆத்மாவும் இல்லை. முற்பிறப்பும் இல்லை. பிற்பிறப்பும் இல்லை. பாவமும் இல்லை. புண்ணியமும் இல்லை. இந்த உடம்போடு எல்லாம் அழிந்து போய்விடும் என்று நாத்திகம் பேசுபவர்கள், மரணத்திற்குப் பின் தாம் செய்த வினைகளுக்கு ஏற்ப தம் உயிர் அழியாமல் நின்று, பல வகையான மாறுதல்களை அடைந்து, பல பிறவிகளில் பட்டுச் சுழல்வதை எள்ளளவு அறிந்தால்கூட, தனது எண்ணங்களை மாற்றிக் கொள்வார்கள் என்று இந்நூலின் ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்டுகிறார். மனிதனுக்குள் தூல, சூக்கும, குண, கஞ்சுக, காரண ஆகிய ஐந்து சரீரங்கள் உள்ளன என்பதை விளக்கும் ஆசிரியர், இதில் தூல சரீரம் மட்டும்அழிவதைத்தான் நாம் காண முடியும். மற்றவை நாம் செய்த நல்வினை, தீவினைக்கேற்ப பிரிந்து சென்ற ஆவியுடன் இணைந்து செயல்படும் ஆற்றல் கொண்டவை என்கிறார். அதற்கு உலகின் பல இடங்களில் நடந்த பல உண்மைச் சம்பவங்களை ஆதாரமாகச் சுட்டிக்காட்டி விளக்குகிறார். அதன்படி அந்த ஆவிகளால் பலருக்கு நிகழ்ந்த நன்மை, தீமைகளை இந்நூலில் விளக்குகிறார். அவை படிப்பதற்கு மர்ம கதைகளைப் போன்று விறுவிறுப்பாகவும், வியப்பூட்டுபவையாகவும் உள்ளன. – பரக்கத். நன்றி: துக்ளக், 21/8/2013.  

—-

 

சத்தியாக்கிரகம், மகாத்மா காந்தி, காந்திய இலக்கிய சங்கமம்.

சத்தியாக்கிரகம் என்ற வார்த்தையின் பொருள், உண்மையை உறுதியாக கடைப்பிடிப்பது, காந்தியை பொறுத்தவரை, சத்தியம்தான் அவருக்கு கடவுள். ஆகையால்தான் சத்தியாக்கிரகம் என்ற சொல், கடவுளிடம் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு அதற்காக, வாழ்க்கையை அர்ப்பணிப்போருடைய வாழ்க்கை என்று பொதுவாக பொருள்படுகிறது. நியாயத்தையும், தர்மத்தையும், நிலைநாட்டுவதற்கு சத்தியாக்கிரகத்தையே காந்தி ஆயுதமாகக் கொண்டார். சத்தியாக்கிரக தத்துவத்தை பற்றி, காந்தி அவ்வப்போது எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பு, அதே பெயரில் நூலாக வெளிவந்தது. இதில் உள்ள முக்கியமான சில பகுதிகளை அ. ராமசாமி, தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். மொத்தம் 198 பக்கங்களுடன் நூல் வெளிவந்துள்ளது. இதை கன்னிமாரா நூலகத்தில் படித்து பயன்பெறலாம். நன்றி: தினமலர், 14/7/13

Leave a Reply

Your email address will not be published.