எண்களின் அன்பர் ஸ்ரீநிவாச இராமானுஜன்
எண்களின் அன்பர் ஸ்ரீநிவாச இராமானுஜன், இரா. சிவராமன், பை கணித மன்றம், 9/11, தெற்கு கங்கை அம்மன் கோயில் இரண்டாம் தெரு, சூளைமேடு, சென்னை. விலை 365ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-081-0.html
இராமானுஜனின் அற்புத கணித ஆற்றலுக்கும் அவரது எளிய வாழ்க்கைத் தன்மைக்கும் சொக்கத் தங்கமான குணத்துக்கும் எப்போதும் யாருக்கும் எத்தீங்கும் நினைக்காத நல்ல மனதுக்கும் உலகில் உள்ள அனைத்து மக்களும் அவரைப் போற்றுவர். அவரது கணிதப் படைப்புகளின் தன்மையை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கி, மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டி, இதுபோல் மேதைகளை உருவாக்குவதே நமது கடமை என்ற நோக்கத்துடன் பை கணித மன்றம் அமைப்பு இந்த புத்தகத்தைக் கொண்டுவந்துள்ளது. கணிதத்தால் ஏற்படும் அச்சம் மற்றும் வெறுப்பை நீக்குவதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இராமானுஜனைப் பற்றி ஆங்கிலத்தில் ஏராளமான புத்தகங்கள் வெளிவந்துள்ளன. ஆனால் தமிழில் மிகக் குறைவான அளவிலேயே வந்துள்ளது. அந்தக் குறையை இரா. சிவராமன் போக்கிவிட்டார். இராமானுஜனின் ஜனன ஜாதகத்தில் இருந்து தொடங்கும் இந்தப் புத்தகம் அவர் கண்டுபிடித்த கணக்குச் சூத்திரத்தின் கையெழுத்துப் பிரதியுடன் முடிகிறது. தன்னுள் ஏதோ ஒரு கடவுள் சக்தி இருந்து இயக்குவதாக இராமானுஜன் நினைத்தார். அவருக்குள் ஏதோ மாய சக்தி இருப்பதாக பலரும் கருதினார்கள். தென் இந்தியாவின் கேட்பிரிட்ஜ் என்று சொல்லப்பட்ட கும்பகோணத்தில் படித்து தன்னுடைய சொந்த முயற்சி, ஆர்வத்தின் காரணமாக தன்னுடைய மேதைமையை வளர்த்துக்கொண்டவர் இராமானுஜன். மற்ற மாணவர்கள் விளையாடிக் கழித்தபோது, அதனைப் பொருட்படுத்தாமல் கணிதத்தில் கழித்தார். தான் இறைவன் அருள் பெற்று பெரிய மேதையாகும் அறிவையும் திறனையும் பெற்றிருந்தாலும் அந்த ஆற்றலை உணர்வதற்கு கடின உழைப்பும் தியாகமும் கொண்டிருக்க வேண்டும் என்ற பெரும் உண்மையை இராமானுஜன் மற்றவர்களுக்கு உணத்தினார் என்று எழுதுகிறார் சிவராமன். 12 வயதில் ஏற்பட்ட கணித ஆர்வம் அவரது மரணப் படுக்கை வரை இருந்ததை அங்குலம் அங்குலமாக வர்ணிக்கிறது இந்தப் புத்தகம். இன்று உலகம் புகழும் மேதை, அன்று எத்தகைய புழுக்கத்தில் வாழ்ந்திருக்கிறார் என்பதைப் படிக்கும்போது வருத்தமாக இருக்கிறது. திடீரென ஒரு நாள் லண்டனில் பாதாள ரயில் பாதையில் செய்துகொள்ளும் எண்ணத்தோடு போய் படுத்துக்கொண்டார் இராமானுஜன். குறித்த நேரத்தில் கிளம்ப வேண்டிய ரயில், ஏதோ கோளாறு காரணமாகக் கிளம்பாமல், அந்தக் கோளாறைச் சரிசெய்யும் நோக்கத்தோடு வந்த ஊழியர்கள், யாரோ படுத்திருப்பதை அறிந்து இராமானுஜனை அந்த இடத்தில் இருந்து அகற்றியுள்ளார்கள். மேதைகளின் வாழ்க்கையும் கணக்கைப்போலவே புரிந்துகொள்ளச் சிக்கலானதாக இருக்கிறது. இவை இன்றைய தலைமுறை படிக்க வேண்டிய பாடங்களாகவும் இருக்கின்றன. -புத்தகன். நன்றி; ஜுனியர் விகடன், 25/8/2013.