ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம்
ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம், பிலிப் மெடோஸ் டெய்லர், தமிழில் போப், சந்தியா பதிப்பகம், புதிய எண் 77, 53வது தெரு,9வது அவின்யூ, அசோக் நகர், சென்னை 83, பக்கங்கள் 800, விலை 550ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-713-5.html
வட இந்தியாவில் 1832ல் பயங்கரமான தொழில்முறை கொள்ளைக்காரன் ஒருவன் ஆங்கிலேய அதிகாரியிடம் அளிக்கும் வாக்குமூலமாகத் தொடங்குகிறது நாவல். ஆங்கிலத்தில் Confessions of a Thug என்ற பெயரில் 1839ல் வெளியான நாவலின் மொழிபெயர்ப்பு இது. நாவல் முழுக்க சரம்சரமாக அவ்வளவு தகவல்கள். கொலை, கொள்ளை, ஊரைச் சூறையாடுதல், சூறையாடாமல் இருக்க ஊரின் முக்கிய பிரமுகர்களிடம் பேரம் பேசி செல்வங்களைக் கறப்பது, பாலியல் வன்முறைகள், காதல், பாசம், நட்பு, துரோகம், இந்துக்கள் – முஸ்லிம்களின் கலாசாரம், உணவுமுறைகள், மத நம்பிக்கைகள், சடங்குகள், சகுனம் பார்த்தல், வணிகம், குறுநில மன்னர் ஆட்சிமுறை, ஜமீன்கள், முன்சீப்களின் அதிகாரங்கள், மன்னர் தொடங்கி கடைநிலை ஊழியர் வரையிலான கையூட்டு, ஆங்கிலேயர் விசாரணைமுறைகள் என்று 17ம் நூற்றாண்டு இந்தியா அப்படியே கண்முன் விரிகிறது. தக்கிகள் என்று அழைக்கப்பட்ட கொலைசெய்து கொள்ளை அடிக்கும் கூட்டத்தினர், மிரட்டல் ஆயுதங்கள் எதையும் பயன்படுத்தாமல் ஒரு கைக்குட்டையை வைத்து எப்படிக் கழுத்தை இறுக்கிக் கொலை செய்தார்கள்… போக்குவரத்து வசதி இல்லாத அந்தக் காலகட்டத்தில் சாலை வழியாகவும், காடுகளின் வழியாகவும் பிரயாணம் செய்யும் வசதி படைத்தவர்களிடம் கண்ணியமான கனவான்கள் போலவும், சிப்பாய்க்ள போலவும், வணிகர்கள் போலவும், வேடமிட்டு மதிநுட்பமாகப் பேசி, எப்படி எல்லாம் அவர்களை வளைத்தார்கள் என்பதையெல்லாம் நுட்பமாக விவரிக்கிறது நாவல். கதையின் நாயகன் அமீர் அலி.அவருடைய தாய், தந்தையர் ஒரு பயணத்தின்போது தக்கிகளால் கொல்லப்படுகிறார்கள். சிறுவனையும் தக்கிகள் கொலை செய்ய முற்படும்போது, தக்கிகள் கூட்டத்தின் தலைவர்களில் ஒருவர் சிறுவனைக் கொல்லவேண்டாம் என்று தடுத்து, தன் மகனாக வளர்க்கிறார். காலப்போக்கில் சிறுவனும் தக்கி தொழிலுக்கு நுழைந்து அச்சமூட்டும் மிகப் பெரிய தக்கியாக எப்படி மாறினான்? அவனுடைய கால், தொழில் தர்மம், பல்வேறு கட்டங்களில் அந்தக் கொடூரமனதில் இருந்தும்கூட வெளிப்படும் அன்பு மற்றும் அற உணர்வுகள் என அமீர் அலியின் வாழ்க்கைப் பாலத்தில் மொத்த நாவலும் பயணிக்கிறது. அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் நிலையான, முறையான ஆட்சியாளர்களம் சட்டங்களும் இல்லாததால் நாடு முழுக்க மக்கள் தங்கள் உயிருக்கும் உடைமைகளுக்கும் எவ்விதப் பாதுகாப்பும் இல்லாமல் வாழ்ந்தார்கள். ஆங்கிலேயர் வருகைக்குப் பின்புதான் சட்டம் ஒழுங்கு ஓரளவு பாதுகாக்கப்பட்டது என்பதை வலியுறுத்தும் ஆவணமாகவே இங்கிலாந்து மக்களுக்காக இந்த நூலை எழுதி இருக்கிறார் ஆங்கிலேய அதிகாரியான நூலாசிரியர் பிலிப் மெடோஸ் டெய்லர். ஆனால் நூலை மொழிபெயர்த்த போப்பு தனது மொழிபெயர்ப்பு அனுபவங்கள் உரையில், கொள்ளை, கொலை, மனித அறத்துக்குப் புறம்பானது என்பதை நிறுவுவதற்காக இந்த நாவல் எழுதப்பட்டு இருந்தாலும், சட்டத்தின் அதிகாரத்தால் அரசின் துணைகொண்டு வெகுதிரள் மக்களிடம் அடிக்கப்படுவது கொள்ளை ஆகாதா? என்று ஆங்கிலேயரின் ஏகாதிபத்தியத்துக்குச் சரியான கேள்வியைத் தொடுத்து இருக்கிறார். நூலாசிரியர் பிலிப் மெடோஸ் டெய்லரின் நோக்கம் எவ்வாறாக இருப்பினும் அன்றைக்கு நடந்ததாக குற்றவாளி அமீர் அலி தனது வாக்குமூலத்தின் ஊடாகச் சொல்லும் சம்பவங்கள் இன்றைய கற்பனா சக்திக்கு அப்பாற்பட்டது. திகிலூட்டக் கூடியது. ரத்தம் கொதிக்கச் செய்வது. நன்றி: ஆனந்தவிகடன், 09 ஜனவரி 2013.