ஓநாய் குலச்சின்னம்
ஓநாய் குலச்சின்னம்,(சிறந்த மொழிபெயர்ப்பு புனைவு), சி. மோகன், அதிர்வு பதிப்பகம்.
மாவோ தலைமையில் சீனாவில் நடந்த கலாசாரப் புரட்சியைத் தொடர்ந்து அங்கு அழிந்துபோன அல்லது அழித்தொழிக்கப்பட்ட மேய்ச்சல் நிலங்களின் தொன்மையை, நாகரிகத்தை, அவை அழித்தொழிக்கப்பட்ட வன்முறையைப் பேசும் வரலாற்று ஆவணம் ஓநாய் குலச்சின்னம். 2004ம் ஆண்டு வெளியாகி Wolf Totem என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. நாவலின் ஆசிரியர் ஜியாங் ரோங், சீனாவின் ஜியாங்சூவில் பிறந்தவர். வெளியான இரண்டே ஆண்டுகளில் 40 லட்சம் பிரதிகள் சீனாவில் விற்பனையான இந்த நாவல், மங்கோலிய மேய்ச்சல் நில நாடோடி மக்களின் ஞானகுரு, போர்க் கடவுள், காவலன், குலச்சின்னம் என எல்லாமுமாக விளங்கும் ஓநாய்களைப் பற்றி பேசுகிறது. மனிதனே பிரதானமானவன் என்ற மாவோவின் சிநத்னை ஆதிக்கம், தொன்மையான மேய்ச்சல் நிலத்தைப் பாலையாக மாற்றிய துயரத்தை விவரிக்கிறது ஓநாய் குலச்சின்னம். ஆங்கிலம் வழியாக தமிழில் இந்த நாவலை மொழிபெயர்த்திருக்கிறார் கவிஞர் சி. மோகன். இவர் அடிப்படையில் கவிஞர் என்பதால் வீரியமான வார்தைகளில் வாக்கியங்களை கட்டமைத்திருக்கிறார். நன்றி: ஆனந்த விடகன், 8/1/2014.
—-
தமிழ் இலக்கிய வரலாறு, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், முல்லை நிலையம், சென்னை 17, பக். 320, விலை 140ரூ.
சிகாகோ பல்கலைக்கழகத்தின் தென்கிழக்கு ஆய்வுகள் துறையில் நூலாசிரியர் ஆற்றிய உரைகளின் அச்சுவடிவம் இந்நூல். தமிழில் இதே தலைப்பில் பல்வேறு காலகட்டத்தில் பலர் எழுதியுள்ள நூல்கள் வெளியாகியுள்ளன. பொதுவாக, அத்தகைய நூல்களில் இலக்கிய வரலாற்றின் ஏதேனும் ஒரு காலப்பிரிவுக்கே காரணகாரியங்களுக்கு அப்பாற்பட்டு அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும். அல்லது, இலக்கியப் போக்குகளை மேலோட்டமாகக் கோடிட்டுக் காட்டும் முயற்சியாகவோ, இல்லையெனில் வெறும் கால வரிசைப்படி அட்டவணைப்படுத்தும் வகையிலோ இருக்கும். இது, பாடப்புத்தகங்களை வாசிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். அந்த வகை நூல்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது இந்நூல். இதில் உள்ள கட்டுரைகள் வெறும் தகவல் தொகுப்பாக இல்லாமல் ஆய்வு நோக்கில் ஆழமாகவும், சிந்தனையைத் தூண்டுவதாகவும் படைக்கப்பட்டுள்ளன. ஆய்வு மாணவர்கள் இலக்கிய ஆர்வலர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் பயன்படும் நூல் . நன்றி: தினமணி, 6/1/2014.