ஓர்மை வெளி
ஓர்மை வெளி, பேராசிரியர் வீ. அரசு மணிவிழாக் கட்டுரைகள், தொகுப்பாளர்கள் இரா. சினிவாசன், பா. மதுகேசுவரன், அ. சதீஷ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 576, விலை 560ரூ.
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையில் பணியாற்றிய பேராசிரியர் வீ. அரசவின் பணி நிறைவையொட்டி, அவரிடம் பயின்ற மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளது. ‘ஓர்மை’ என்பதை ஆங்கிலத்தில் (Consciousness) என்று தமிழில் மொழியாக்கம் செய்யலாம். ‘ஒர்மை வெளி’ என்பதை A Space for consciousness என்று மொழியாக்கம் செய்யலாம். சமூகப் பொறுப்புணர்வு, மனச்சான்றுக்குக் கட்டுப்பட்டு வாழ்தல், நேர்மையாக இருத்தல், தவறை எதிர்த்துக் கேட்கும் மனத்திட்பம் என்று பல்வேறு பொருள்களில் விரித்தும் பொருள் கொள்ளலாம். இதற்கான வாய்ப்பைப் பண்பாட்டுக் கல்வி மூலம் தமிழ் இலக்கியத் துறை பயிற்றவிக்கும் சூழலை உருவாக்கியது. இதனை ‘ஓர்மை வெளி’ எனக் குறித்துள்ளோம் என நூலின் தலைப்புக்கு விளக்கமளித்துள்ளனர் தொகுப்பாளர்கள். மரபு இலக்கியம் – இலக்கணம், நாட்டார் வழக்காற்றியல், தமிழ்ச் சமூக வரலாறு. 20ஆம் நூற்றாண்டு ஆக்கங்கள், அச்சுப் பண்பாடு, ஆவணம், தமிழ் இலக்கியத் துறை குறித்த பதிவுகள் ஆகிய ஏழு முதன்மையான தலைப்புகளின் அடிப்படையில் பல்வேறு பொருண்மைகளில் மொத்தம் 85 கட்டுரைகள் அமைந்துள்ளன. மணிமணியான தகவல்களைத் தரும் இக்கட்டுரைகள் அனைத்தும் மணிவிழாவில் வெளியாகியுள்ளது தனிச்சிறப்பு. நன்றி: தினமணி, 16/3/2015.