ஔவைத் தமிழ் களஞ்சியம்
ஔவைத் தமிழ் களஞ்சியம், வேம்பத்தூர் கிருஷ்ணன், சுடர்மணி பதிப்பகம், பக். 144, விலை 50ரூ.
அவ்வையாருக்கு ஒரு கோட்டம் கட்டும் முயற்சியில் பல்லாண்டுகளாக பாடுபடுபவர் வேம்பத்தூர் கிருஷ்ணன். அவ்வையார் பற்றி 36 அறிஞர்கள் எழுதிய கட்டுரைகள் இந்தத் தொகுப்பில் படிப்பவருக்கு இனிமை ஊட்டும். இக்கட்டுரை ஆசிரியர் உடல் தளர்ந்தாலும், உள்ளம் தளராமல் அவ்வையாரை மீட்டுருவாக்கம் செய்வதில் பேரார்வம் கொண்டவர் என்பதை, அவரது இந்தத் தொகுப்பே கூறிவடும். சிவாலயம் மோகனின் முதற்கட்டுரை, திருமூலரில் துவங்கி, அவ்வை வரையில், சிவநெறி எவ்வாறு போற்றப்படுகிறது என்று கூறுகிறது. அதில் மூத்தோர் வார்த்தை அமிர்தம் என்பதற்கு தேவார மூவரே மூத்தோர் என்றும், ஓதுவது ஒழியேல் என்பதற்கு தேவாரங்களை ஓதுவது என்றும் சிறப்பு விளக்கம் தந்துள்ளார். மூன்று அவ்வையார் பற்றிய விளக்கங்கள் தந்துள்ளார். கன்னியாகுமரி, தஞ்சை, சேலம், சென்னை, மாவட்டங்களில் உள்ள அவ்வையார் கோவில்களின் விவரங்கள் தரப்பட்டுள்ளன. கரும்பை தமிழகத்திற்கு முதலில் கொண்டு வந்த அஞ்சி மன்னனை அவர் பாடியதே சிறப்பு என, தமிழ்த்தாத்தா எழுதி உள்ளார். அவ்வை பற்றிய அருமையான தொகுப்பு நூல். -முனவர் மா.கி. ரமணன். நன்றி: தினமலர், 9/8/2015.