கடல் கிணறு
கடல் கிணறு, ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், சென்னை, விலை 60ரூ.
மௌனமாய் மரணத்தைப் பேசும் கதைகள் கடல் கிணறு தொகுப்பில் இருக்கிற சிறுகதைகள் வழக்கமான தமிழ்க் கதைகள் அல்ல. மனதின் வலியிலிருந்து எழுதப்பட்ட, சமூக நிகழ்வுகளின் கொடூரங்கள் தந்த மன அழுத்தத்திலிருந்து எழுதப்பட்ட கதைகள். அரசியல் கதைகள் என்று தோற்றம் தருகிற உண்மை அறிதல், எட்டாம் தூக்கம், ழ, வார்த்தைகள் போன்ற கதைகளில் முக்கியமான பாத்திரம் அரசியல் அல்ல. மரணம்தான். அதைவிடவும் மௌனம்தான் எல்லாக் கதைகளிலும் பிரதான பாத்திரம். தொகுப்பின் அநேகக் கதைகளில் மரணம் நிகழ்கிறது. ஆனால் புலம்பலோ, கண்ணீரோ வெளிப்படுவதில்லை. ரவிக்குமாரின் மனிதர்கள் கண்ணீரிலிருந்து, புலம்பலிலிருந்து விலகியே இருக்கிறார்கள். வீட்டைவிட்டு ஓடிப்போகிற கணவன் குறித்து மனைவி புலம்புவதில்லை. அழுவதில்லை. உண்மை அறிதல் கதையில் பெரிய கலவரத்தில் ஒரே நேரத்தில் பலர் இறந்துபோகிறார்கள். அந்த இடத்திலும் கதறல், கண்ணிர், புலம்பல் இல்லை. மாறாத மௌனம் நிலவுகிறது. கதைகளில் கண்ணீர், புலம்பல் இல்லாதது மட்டுமல்ல, பேச்சும் இல்லை. ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகள் மட்டும் பேசுகிறார்கள். அநேகக் கதைகளில் பாத்திரங்களுக்கு பெயர்களே இல்லை. ரவிக்குமாருடைய மனிதர்கள் வாழ்வதற்காக ஆசைப்படாதவர்கள், அதற்காகப் போராடாதவர்கள், வாதாடாதவர்கள். மாறாக வீட்டிலிருந்து ஊரிலிருந்து வெளியேறிக்கொண்டிருப்பவர்கள். வீடு, ஊர், சொந்தம் மட்டுமல்ல தங்களுடையே உடலே தங்களுக்குச் சொந்தமில்லை என்று நம்புகிற மனிதர்கள். இப்படி இருக்கிறவர்களைப் புனிதர்கள் என்று நம்ப வேண்டியதில்லை. தூங்குகிற மனிதனிடம் திருடுகிறவர்கள், தாயுடனும், மகளுடனும் ஒரே நேரத்தில் படுக்கிறவர்கள், மனைவியை விட்டு ஓடுகிறவர்கள்தான் இவர்கள். எது மனிதர்களை ஓயாமல் துரத்திக்கொண்டேயிருக்கிறது? தெரியாது. கதையிலும் அதற்கான தடயம் இல்லை. காரணம் சொல்லப்படுவதில்லை. ஆனால் காரியம் நடக்கிறது. கடல் கிணறு கதையில் வரும் அப்பா ஓயாமல் ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டிருக்கிறார். அம்மாவும் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். மனிதர்கள் போய்க்கொண்டேயிருக்கிறார்கள். எங்கே? இதுதான் ரவிக்குமார் உருவாக்கும் புதிர். கடல் கிணறு தொகுப்பிலுள்ள அநேகக் கதைகள் நிலையாமை பற்றியும் மரணத்தைப் பற்றியும் புதிய உரையாடலை நிகழ்த்துகின்றன. உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் கதையில் கூடுதலாக ஒரு சொல் இல்லை. கடல் கிணறு தொகுப்பில் வார்த்தைகள் என்ற கதை சிறு பத்திரிக்கை உலகம் பற்றி நகைச்சுவையோடு சொல்லப்பட்ட கதை. அரசியலுக்கு எதிராகப் பேசுகிறவர்கள், எழுதுகிறவர்கள் எப்படி அதிகாரத்தை அடைவதற்காக அலைகிறார்கள், போராடுகிறார்கள் என்பதுதான் கதை சொல்லும் செய்தி. செறிவும், கச்சிதத் தன்மையும், கதைகளுக்கு வலுசேர்க்கின்றன. மங்கி தேய்ந்து போகாத புது சொற்களால் கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. கடல் கிணறு தொகுப்பு கதைகள் புற உலகைப் பற்றிப் பேசுவதாகத் தோற்றம் தந்தாலும் அக உலகப் பயணத்தையே அதிகம் பேசுகின்றன. செத்துப்போகாத சொற்களால் எழுதப்பட்டுள்ளது கடல் கிணறு தொகுப்பு. -இமையம். நன்றி: தமிழ் இந்து, 28/5/2014.