கதையில் கலந்த கணிதம்
கதையில் கலந்த கணிதம், இரா. சிவராமன், பை கணித மன்றம், பக். 168, விலை 150ரூ.
இந்த நூல் கதைகள் மூலம் கணிதத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. இரண்டாக பிளந்தாலும் மீண்டும் ஒன்று சேரும் வரம் பெற்ற ஜராசந்தனை, மகாபாரத போரில் பீமன் எவ்வாறு வீழ்த்துகிறான் என்பதை 2025, 3025, 9801 என்ற எண்களை வைத்து கூறுவதை ரசிக்கலாம். குருசேத்திர போரில் கையாளப்பட்ட சக்ர வியூகம் எத்தகையது என்பதை விளக்கும் கணித முறையும் வியப்பளிக்கிறது. மகர வியூகம், கூர்ம வியூகம், பத்ம வியூகம், கருடு வியூகம், வஜ்ர வியூகம் என மகாபாரத போர், அறிவியல் ரீதியாகவும் செயல்பட்டது என்பதை படங்களுடன் ஆசிரியர் விவரித்துள்ளார். இயேசும், பித்தாகரசும், மீன்களின் எண்ணிக்கையை, 153என, எப்படி சரியாக கூறினர். கடலில் தோன்றும், காரிப்டிஸ் என்ற நீர் சுழற்சியினி தன்மை, குபேர யந்திரத்தின் மாய கூடுதல் மாறிலி, 72 ஆக, ஏன் அமைகிறது. சுக்ராச்சாரியார், மிருத சஞ்சீவினி மூலிகையின் ரகசியத்தை எவ்வாறு பயன்படுத்தினார் என்பது உட்பட, புத்தகம் முழுவதும் ஆச்சரியம் ததும்புகிறது. -சுரேஷ். நன்றி: தினமலர், 25/1/2015.
—-
ஹிந்து வாழ்வியல் சடங்குகள், ஆர்.பி.வி.எஸ். மணியன், வர்ஷன் பதிப்பகம், பக். 156, விலை 100ரூ.
இந்துக்கள், தம் இல்லங்களில் செய்துவரும் பல சடங்குகளின் அர்த்தம் தெரியாமலே செய்து வருகின்றனர். அந்த சடங்குகளின் அர்த்தங்களை மேலோட்டமாகவாவது தெரிந்துகொள்ள இந்த நூல் உதவுகிறது. இந்த நூலில் 24 கட்டுரைகள் உள்ளன. சோடச சம்ஸ்காரங்கள் யாவை என்று விளக்குவதும் (பக். 14), பெயர்சூட்டல் எனும் நாமகரணம் பற்றியும் பெயரைச் சுருககாமல் கூப்பிடுவதால் அந்த குழந்தை அடையும் பலனை கூறுவதும் (பக். 25), உபநயனம் குறித்து விளக்குவதும் (பக். 46), திருமண சடங்குகளை விரிவாக கூறுவதும் (பக். 58), ஐம்பெரும் வேள்விகளை விளக்குவதும் (பக். 103), சிரார்த்தம் குறித்து, புறநானூற்றின் 92ஆவது பாடல் அடிகளைக் கூறி விளக்குவதும் படிப்பதற்கு மிகவும் சுவையாக உள்ளன. இந்த நூலில் கூறப்படும் பல சடங்குகளுக்கு புறநானூறு, குறுந்தொகை, திருக்குறள் ஆகிய நூல்களின் துணைகொண்டு விளக்கம் அளிப்பது, நூலாசிரியரின் ஆழ்ந்த புலமைக்கு சான்று. -டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி: தினமலர், 25/1/2015