கனவுகள்

கனவுகள் (ஒரிய மொழி சிறுகதைகள்), சந்திரசேகர் ராத்,ரா. குமரவேலன், சாகித்யஅகடமி, 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 400, விலை 190ரூ.

பேராசிரியர் சந்திரசேகர் ராத், ஒரிய மொழி எழுத்தாளர்களில் மிகச் சிறந்த ஒருவராகக் கருதப்படுபவர். அவர் ஒரு நாவலாசிரியரும், நல்ல கவிஞரும் கூட. அவர் எபதிய நூற்றுக்கணக்கான சிறுகதைகளில் மிகச் சிறந்ததாகக் கருதப்படும் 25 சிறுகதைகளை மொழிபெயர்த்து தொகுத்திருக்கின்றனர். இவற்றில் சாமூவேல் பாதிரியாரின் கதை, உள்ளத்தை உருக்குவதாய் இருக்கிறது. அனாதை ஆசிரமத்தை நிர்வகிக்க அவர் படும்பாடு, தியாகம் ஆகியவை அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. புத்தகத்தின் தலைப்பான கனவுகள் சிறுகதையில் நல்ல விளையாட்டு திறமை இருந்தும், அவர்கள் ஏழைகள் என்பதால் எப்படி புறக்கணிக்கப்படுகின்றனர் என்பதை படம் பிடிக்கிறது. மிகச் சில இடங்களில் தமிழாக்கம் இன்னும் சற்று எளிமையாக இருந்திருக்கலாமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. வேறு மாநில கதைகளையும் படித்து ரசிக்க விரும்புவோருக்கு இது மிக நல்ல நூல். -மயில் சிவா. நன்றி: தினமலர், 28/7/2013.    

—-

 

மருதகாசி திரையிசைப் பாடல்கள் (இரு தொகுதிகள்), தொகுப்பாசிரியர்-பொன். செல்லமுத்து, முதல் தொகுதி பக். 352, விலை 150ரூ. இரண்டாம் தொகுதி பக். 368, விலை 160ரூ. மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-177-6.html

1949இல் வெளிவந்த மாயாவதி படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் மருதகாசி. இவர் அடுத்த 30 ஆண்டுகளுக்குத் தமிழ்ப் படவுலகின் முக்கிய பாடலாசிரியராகத் திகழ்ந்தார். இவர் எழுதிய 312 பாடல்கள் முதல் தொகுதியிலும் 360 பாடல்கள் இரண்டாம் தொகுதியிலும் இடம்பெற்றுள்ளன. இவர் புராணம், இதிகாசம், சமூகம், இலக்கியம் என கதைகளுக்கேற்ப பல்வேறு பிரிவுகளிலும் தனது புலமையாலும் வாழ்க்கை அனுபவத்தாலும் சிறந்த பாடல்களைக் கொடுத்திருக்கிறார். ஆடாத மனமும் உண்டோ, முல்லை மலர் மேலே, வாராய் நீ வாராய், சமரசம் உலாவும் இடமே, அடிக்கிற கைதான், தென்றல் உறங்கிய போதும் முதலிய பாடல்கள் கருத்தாழமிக்கவை. கதையின் தேவைக்காக பிஸ்தா பருப்பு, மாம்பழம், சாத்துக்குடி போன்றவற்றைப் பற்றியெல்லாம்கூட பாடல் எழுதியிருந்தாலும் எதிலும் விரசம் என்பதே இல்லை. சம்பூர்ண ராமாயணம், லவகுசு, தசாவதாரம் ஆகிய மூன்று படங்களிலும் ராமபிரானின் கதையை பாடல் வடிவில் சொல்லியிருந்தாலும் ஒரு பாடலில் சொல்லப்பட்ட வார்த்தைகள் அடுத்த பாடலில் மீண்டும் வந்துவிடாமல் தவிர்த்திருப்பதில் அவரது மொழி ஆளுமை புலனாகிறது. கவிஞர் விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதால் வேளாண்மை தொடர்புடைய மணப்பாறை மாடுகட்டி, தைபொறந்தா வழி பொறக்கும், ஏர் முனைக்கு நேர் இங்கே, கடவுள் என்னும் முதலாளி ஆகிய பாடல்கள் அற்புதமாக அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு தொகுதியின் இறுதியிலும் படங்களின் பெயர்கள் மற்றும் பாடல்களின் முதலடி ஆகியவை பக்க எண்களுடன் அகர வரிசைப்படி கொடுக்கப்பட்டிருப்பதும் கவிஞரின் பாடல் இடம்பெற்ற படங்கள் ஆண்டு வரிசைப்படி கொடுக்கப்பட்டிருப்பதும் தொகுப்பாசிரியரின் உழைப்பைக் காட்டுகிறது. நன்றி: தினமணி, 29/7/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *