கம்பனில் சட்டமும் நீதியும்
கம்பனில் சட்டமும் நீதியும், நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன், வானதி பதிப்பகம், சென்னை, விலை 150ரூ.
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்ட கம்பன் காப்பியத்தை, இதுவரையில் யாரும் தொட்டு பார்க்காத அளவில் பல ஆழமான கருத்து பெட்டகங்களை வெளியே கொண்டு வந்து காட்டியிருக்கிறார் நூலாசிரியர் நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன். இவர் சட்டத்தை கரைத்து குடித்தவர் என்பதால், கம்பனில் சட்டமும், நீதியும், நீதிபரிபாலனமும் எந்த அளவில் இருந்திருக்கிறது? என்பதை முழுமையாக ஆய்வு செய்து தெரிவித்துள்ளார். நீதி, மனுநீதி போன்ற சட்டம் தொடர்பான கருத்துக்களையெல்லாம் ஆழமாக எடுத்துக்காட்டியிருக்கிறார். எவை, எவை பாவங்கள்? என்று 48 வகையான பாவங்களை பரதன் பட்டியலிட்டிருப்பதை பார்த்தால், இந்திய தண்டனை சட்டத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ளவையெல்லாம் கம்பனால் அக்காலத்திலேயே தெள்ளத் தெளிவாக குறிப்பிடப்பட்டிருப்பது ஆச்சரியத்தின் எல்லைக்கே கொண்டுபோய்விடுகிறது. வாதங்கள், பிரதிவாதங்கள் மட்டுமல்லாமல் தடியடி போன்றவை சட்டத்திற்கு விரோதமானது என்று ராமன் கண்டித்த காட்சியைகூட தெளிவாக கூறி உள்ளார். குற்றமும், தண்டனையும் எவ்வாறு இருக்க வேண்டும்?, புலன் விசாரணை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும்? என்பது உட்பட கம்பன் குறிப்பிட்ட எவ்வளவோ மேற்கோள்கள், இந்த நூலில் காட்டப்பட்டுள்ளன. 184 பக்கம் கொண்ட இந்த நூலின் ஒவ்வொரு பக்கமும் இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு தேனில் தோய்த்த பலாச்சுளைபோல் இனிக்கும். நன்றி: தினத்தந்தி, 10/9/2014.
—-
101 சுவாரசியமான உண்மைச் சம்பவங்கள், கே.எஸ்.ஆமோஸ், வேர்ட் ஆப் கிறைஸ்ட் மினிஸ்ட்ரீஸ், சென்னை, விலை 50ரூ.
உலகப்புகழ் பெற்ற தலைவர்கள், பிரமுகர்களின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளை இந்நூல் கூறுகிறது. மொத்தம் 101 சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. சில சம்பவங்கள் சுவாரசியமானவை. சில சம்பவங்கள் உள்ளத்தைத் தொடுபவை. வேறு சில சம்பவங்கள் ஆச்சரியப்படவைப்பவை. கிறிஸ்தவர்கள் சம்பந்தப்பட்டவை என்றாலும், எல்லோரும் படித்து ரசிக்கத்தக்கவகையில் அமைந்துள்ளன. நன்றி: தினத்தந்தி, 10/9/2014.