கடவுளின் கைபேசி எண்
கடவுளின் கைபேசி எண், இ.சு. முரளிதரன், ஜீவநதி பப்ளிகேஷன்ஸ், பக். 76, விலை 200ரூ.
ஈழத்துக் கவிஞர் இ.சு. முரளிதரனின் இச்சிறுகதைத் தொகுப்பு, ஈழத்து சிறுகதையின் போக்கு உலகச் சிறுகதைப் போக்குடன் இயைந்துபோகிறது என்பதற்கு உதாரணம். தொண்ணூறுகளுக்குப் பிறகான பின் நவீனத்துவப் பாணியிலான சிறுகதை வளர்ச்சிக்கு ஈழத்து அரசியல் சூழலும் பேரினவாத ஒடுக்குமுறையின் கொடூரமான நிலைமையுமே காரணம் என்பதற்கான சான்றாக கடவுளிக் கைபேசி எண் தொகுப்பு அமைந்துள்ளது. பாடக்குறிப்பு, பாராட்டுச் சான்றிதழ், கைபேசி உரையாடல், AB+ குருதியும் நீலநரியும் ஆழ்ந்த அர்த்தம் தருபவை. ஈழத்தின் சமகால அரசியல் நிகழ்வுகள், முரண்பாட்டுச் சிக்கல்களை சுவைகுன்றாமல் பதிவு செய்கிறார். யதார்த்த்தைச் சொல்லும் டுள்ளா போன்ற சிறுகதைகளும் உயிர்த்துடிப்போடு படைக்கப்பட்டுள்ளன. யதார்த்தம், தொன்மம், பின் நவீனத்துவம் என்று இத்தொகுப்பின் போக்கு அமைந்துள்ளது. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 17/9/2014.
—-
நெடும்பயணம், கி. பார்த்திபராஜா, ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை, பக். 112, விலை 80ரூ.
நான்கு நாடகங்களின் தொகுப்பு நூல். விவசாயம் நசுக்கப்பட்டு தொழில்வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் கூத்துக்கள், அதன் விளைவுகள் பற்றி ரெட் சிக்னல் நாடகம் வழி விரிவாக அலசுகிறார் ஆசிரியர். திருப்பிக்கொடு ஹங்கேரிய தழுவல் நாடகம் என்றாலும், தமிழகத்தில் கல்வியானது வணிகமயமாக்கப்பட்ட அவலத்தை முகத்தில் அறைந்து கூறுவது பொருத்தம். மலை மக்களின் காதல் திருமணத்திற்கும் சமவெளி மக்களின் அரேஞ்சுடு மேரேஜுக்கும் இடையேயான முரண் நெடும் பயணத்தின் விவாதப் பொருளாகிறது. பீமன், சகுனி, திரௌபதி என்ற மூன்று கதாபாத்திரத்தையும் ஒரே கலைஞன் மேடையில் நிகழ்த்தும் குறுக்குவெட்டுப் பயணமாக மூன்று கோணங்கள் நாடகம் அமைந்துள்ளது. சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்துக் குரல்கொடுக்கும் கவிஞனின் செயல்பாடாகவே இந்நாடகங்கள் அரங்கேறுகின்றன. நன்றி: குமுதம், 17/9/2014.