கம்பன் சில தரிசனங்கள்
கம்பன் சில தரிசனங்கள், பேராசிரியர் மு. ராமச்சந்திரன், ராஜபாளையம் கம்பன் கழக அறக்கட்டளை, 12, தாண்டல் கந்தசாமி ராஜா தெரு, ராஜபாளையம் 626117, பக். 136, விலை 110ரூ.
சிவகாசி கல்லூரி ஆங்கிலப் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்ற பேராசிரியர் மு. ராமச்சந்திரன் மிகச்சிறந்த பட்டிமன்ற நாவரசர். கம்பராமாயணக் கடலில் மூழ்கி பத்து முத்தான கட்டுரைகளை எழுதி, முன்வைத்துள்ளார். அனுமனும், இலக்குவனும், ராமனுக்கு செய்த பயன் கருதாத தொண்டு, முதலில் நம்மை வரவேற்கிறது. தம்பியர் அறுவர் கட்டுரையில் குகன் அன்பினன் பெருமாள், சுக்ரீவன் அரசியலாளர் மகாராஜா, வீபிடணன் ஆன்மிக ஆழ்வார் என்று அழகுடன் எடுத்துக் காட்டியுள்ளார். வாலி கொல்லப்பட்டதற்கு இவர் தரும் தீர்ப்பு இது. It is planned political murder for Rama’s personal gain and Sugrivas political gain. அசோக வனத்தில் தவமிருந்த சீதையை நோக்கி ராமன் போட்ட நெருப்புக் கேள்விகளும், அதற்கு பதிலான அக்னிப் பிரவேசமும், கம்பனின் பிழைகளும், படிப்பவர் மனதில் கல்வெட்டாய் பதியும். -முனைவர் மா.கி. ரமணன்.
—-
கனவு மெய்ப்பட வேண்டும், வெ. துரைசாமி, ஆப்பிள் பப்ளிஷிங் இன்டர்நேஷனல் பிரைவேட் லிட், 130, நெல்சன் மாணிக்கம் சாலை, சென்னை 29, பக். 297, விலை 195ரூ.
ஒரு கற்பனை கதாபாத்திரத்தின் மூலம், இன்றைய இந்தியாவின் சமூக, பொருளாதார பிரச்னைகளை எப்படித் தீர்க்கலாம் என்பதற்கான ஆலோசனைகளுக்கு வடிகாலாய், சில சிந்தனைகளை நூலாசிரியர் தந்துள்ளார். அடர்ந்த காட்டில், இரவு நேரத்தில் சத்தமிடும் சில பூச்சிகள், தாம் தான் எல்லா ஜீவராசிகளையும் விட பலம் வாய்ந்தவை என்று நினைத்துக் கொள்ளும். ஆனால் கோடிக்கணக்கான பலம் வாய்ந்த பல ஜீவராசிகள், அதை எல்லாம் சட்டை செய்யாமல், தன் வேலையை சத்தமில்லாமல் செய்து கொண்டிருக்கும்(51) என்று கூறி, நமது நாட்டில் ஒரு சட்டம் வர வேண்டும். அதாவது, அரசியல்வாதிகளின் வாரிசுகள் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு எந்தப் பதவிக்கும் வரக்கூடாது என்று இருக்க வேண்டும் (170) என்றும் தம் கனவைக் கூறியுள்ளார். இப்படி ஏராளமான கனவு காண்பவர்கள் செயலுக்கு வந்தால், இது போன்ற கனவுகள் மெய்பட வேண்டும். நன்றி: தினமலர், 29/12/13