கம்பன் தமிழும் கணினித் தமிழும்
கம்பன் தமிழும் கணினித் தமிழும், நா. முத்து நிலவன், அகரம் வெளியீடு, தஞ்சாவூர், விலை 140ரூ.
இரண்டாம் பரிசு பெற்ற பாரதியார் கவிதை நாட்டுப்பற்று பற்றிய பாடல் எழுதப் போட்டி ஒன்று தூத்துக்குடியில், நடைபெற்றிருக்கிறது 1914இல் நண்பர்களின் வற்புறுத்தலுக்காக அதில் கலந்துகொண்டு இரண்டாம் பரிசு பெற்றவர் மகாகவி என்று கொண்டாடப்படுகிற பாரதியார். அந்தப் பாடல்தான் செந்தமிழ் நாடென்னும் போதினிலே என்று குறிப்பிட்டுச் சுவையான சில செய்திகளைத் தருகிறார் நா. முத்துநிலவன் தம்முடைய கட்டுரை ஒன்றில். கம்பனைப் பற்றிய கட்டுரை ஒன்றில் வடமொழி பக்தி நூல்களை விடவும் தமிழ்நாட்டு பக்தி இயக்கங்களும், இலக்கியங்களும் சாதிய உடைப்புக்கு ஆற்றிய பங்கை ஆய்வு செய்வது அவசியம் என்று கூறுவதை முக்கியமாக கவனிக்க வேண்டும். தீ பரவட்டும் என்று நெருப்பு வைத்துவிட்டால் மட்டுமே அழிந்து நீறாகிவிடக்கூடியவன் அல்லன் கம்பன் என்பது வரலாறு தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியக்கூடிய செய்தி. விமர்சகராகப் புகழ்பெற்ற க.நா.சு.வைப் பற்றிய அப்பட்டமான விமர்சனம் சிலரை முகஞ்சுளிக்கச் செய்யும்தான். அவருடைய விமர்சனங்களில் முரண்பாடுகள் அதிகம். சுபமங்களா இதழில் ஆசிரியர் எழுதிய இந்தக் கட்டுரையை இதற்கான எதிர்ப்புகளோடும் ஆதரவுகளோடும் தொகுத்துத் தந்திருப்பிது நேர்மையான செயல். அவ்வாறே கண்ணதாசனைப் பற்றியும் ஜெயகாந்தனைப் பற்றியும், மேலாண்மை பொன்னுச்சாமியைப் பற்றியும் எழுதியுள்ள மதிப்பீடுகள் சீரானவை. கணினித் தமிழ் உட்படப் பதினாறு அருமையான கட்டுரைகள். -சுப்ர. பாலன். நன்றி: கல்கி, 8/2/2015.