கருநாவு

கருநாவு, ஆழியாள், மாற்று வெளியீடு, சென்னை, விலை 60ரூ.

புலம்பெயர் வாழ்வியல் வலிகள் புலம்பெயர் இலக்கியங்களுள் பெண் படைப்புகளுள் தன்னை முனைப்புடன் பதிவு செய்துகொள்ளும் கவிதைகள். எவ்வளவு தவிர்த்தும் சில கவிதைகள் இனம் புரியாத ஒரு உந்துதலை, ஆர்மூடுகல் மனநிலையை மீண்டும் மீண்டும் என்னுள் ஏற்படுத்துகின்றன. அதனாலே அவை ஏதோ ஒரு உத்வேகத்தோடு சடுதியாக எழுத்தில் பதியப்படுகின்றன. சில கவிதைகள் பள்ளிக் குழந்தைகள் போன்று தொடர்ந்து பேசிக்கொண்டே வருவதால் ஒரு சிட்டுக்குருவி போலே தொடர்ந்து கண்ணாடியைக் கொத்திக் கொண்டே இருப்பதால் அவை தரும் செல்லத் தொந்தரவில் இருந்து விடுபடுவதற்காக அவற்றைப் பதிய வேண்டி வருகிறது. இந்த இடத்தில் நான் கேட்டது கண்டது, கனவு கண்டது, காண விரும்பியது, காண விரும்பாதது ஆகிய சம்பவக் கோவைகள்தாம் எனக் கூறியவாறே தன்னுடைய கவிதைகளை படைத்திருக்கின்றார் ஆழியாள். இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஈழப் பெண் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர். இவரது கவிதைகள் பெண் விடுதலை சார்ந்தும், இயற்கை, போரின் வலிகள், புலம்பெயர் வாழ்வியல்கள் என்பன சார்ந்தும் படைக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் வாழ்வியலில் ஒர் அம்மா தன் கால்களுக்கு சில்லுக் கட்டியவளாக இயங்க வேண்டியவள் ஆகின்றாள் என்பதை கூறுவதுடன் அங்கு அம்மா என்ற பாத்திரத்தின் ஊடாக புலம் பெயர் ஈழப் பெண்களையும் சுட்டி நிற்கின்றார். காதோரச் சவ்வுகளில் வலி சுண்ட கிளை களாய் உறைந்து தொங்குகிற கொடும் பனியின் வெண் மையூடு ஒரு சறுக்கு வித்தைக்காரியைப் போல அம்மா குளிரில் ஓடுகிறாள் என்பதனூடாக அங்கு வயதானாலும் வாழ்க்கை, உழைப்பும் ஓட்டமும் நடையுமாகவே உள்ளது என்பதை இயல்பாக்கிக் கொள்ள வேண்டியுள்ளது. பெண் விடுதலை சார்ந்து குறிப்பிடுகையில் கூடாரங்கள் அமைத்து வனாந்தரங்களில் அலைந்தாலும் தூர தேசக் குளிரில் திசையறுந்து திரிந்தாலும் ஒளிப் பெருக்கெடுத்து பொங்கி பேறாய் விரியும் பால் வெளியைக் கண்டு சிலிர்த்த குமாரத்திகள் வீடு திரும்புவதில்லை இனி வீடு திரும்புதல் எனக்கில்லை தந்தை யரே எனக்காக நீங்கள் காத்திருக்க வேண்டாம் என ஆணாதிக்க சமூகத்தின் மீதான தொடுப்பாக அமைகின்றது இக்கவிதை. பொது வழக்கில் மௌனம் என்பது சம்மதத்தின் அறிகுறியாகவே நாம் வாழ்வியலில் கடைப்பிடித்து பழகிவிட்டோம். ஆனால் இங்கு மௌனம் ஒரு பாவனை கூர்ந்து கவனித்தலின் குணாம்சம் அல்லது ஒட்டாமல் இருத்தலின் வெளிப்பாடு மௌனம் அனுபவம் கற்றுத் தந்த மந்திரச்சொல் பேரமைதியின் மகத்தான இசைக்குறிப்பு என மிக ஆழமாக மௌனத்தை அனுபவித்த வரிகளாகவே இந்த உணர்வை உணர முடிகின்றது. 33 கவிதைகளைக் கொண்ட கருநாவு என்ற இக்கவிதைத் தொகுதியில் இறுதியில் கங்காரு, காக்ககைச் சிறகுகள், வெளி பற்றிய கனவில் போன்ற 7 கவிதைகள் மொழிபெயர்ப்புக் கவிதைகளாக உள்ளன. கெவின் கில்பேட், எலிசபெத் ஹொச்சன், ஜோன் லூயிஸ் கிளார்க், ஜோட் டேவிஸ், பான்சி ரோஸ் நபல்சரி, ஜோக் டேவிஸ் ஆகியோரின் ஆங்கில மொழிக் கவிதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. என்னுடைய அம்மம்மாவும், அப்பப்பாவும் இரு கருண் காக்கைச் சிறகுகள் போலவே கரிய நிறத்தவர்கள் அவர்கள் போராட வேண்டி இருந்தது ஒன்றாய் உயிர் வாழவும் காதல் செய்யவும் சாவதற்கும் அவர்கள் போராட வேண்டி இருந்தது தங்களுக்குச் சொந்தமான சொந்த மண்ணிலே (காக்கைச் சிறகுகள் – லூயிஸ் கிளார்க்) ஒவ்வொருவர் வாழ்விலும் வாழ்வுக்கான போராட்டம் என்பது இயல்பாகிப் போனது. இது ஆழியாளின் மூன்றாவது கவிதை தொகுதி. ஆழியாளின் கவிதைகள் புலம் பெயர் இலக்கியங்களுள் பெண் படைப்புகளுள் தன்னை முனைப்புடன் பதிவு செய்து கொள்கின்றது என்பது காலத்தின் தேவையாகும். -யாழ் தர்மினி பத்மநாபன் நன்றி: இந்தியா டுடே, 25/2/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *