கற்க கசடற விற்க அதற்குத் தக
கற்க கசடற விற்க அதற்குத் தக, பாரதி தம்பி, விகடன் பிரசுரம், சென்னை, விலை 120ரூ.
கற்க கசடற… கற்றபின் நிற்க அதற்குத் தக என்பது வள்ளுவர் காலம். கற்க கசடற கற்றபின் விற்க அதற்குத் தக என்பது கொள்ளையர் காலம். காலத்தை வெறும் கணக்காக மட்டுமல்லாமல், வளர்ச்சிக்குரியதாக மாற்றியது கல்வியும் அதனால் விளைந்த அறிவும்தான். அந்தக் கல்வியும் அறிவும் விலைபோன இந்தக் காலம்தான் மிகமிக மோசமானது. நாட்டின் குடிமகனுக்குக் கல்வியையும் சுகாதாரத்தையும் தருவதில் இருந்து ஓர் அரசாங்கம் என்று தவறியதோ, அன்றே மக்களைப் பற்றி பேசும் அருகதையை இழந்துவிட்டது. இதனை தர மறுத்தவர்களால்தான் மதுக்கடைகளின் வியாபாரத்தை மகிழ்ச்சியோடு பார்க்க முடிகிறது. சரியானவர்கள் செய்யத் தவறும்போது அது தவறானவர்களால் செய்து முடிக்கப்படும் என்பது கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரையில் சரியாகப் போனது. அப்படி வியாபாரம் ஆன கல்வி நிறுவனங்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகை இது. பத்திரிகையாளர் பாரதி தம்பி, தனது அக்கறை சார்ந்த அறிவையும் ஆர்வத்தையும் கல்வியை நோக்கித் திருப்பி தனக்குத் தெரியவந்த கயமைகளையும் யதார்த்தங்களையும் மறைக்காமல் நேர்த்தியான எழுத்தில் ஆனந்த விகடனில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். சமூகம் இதுவரை அங்கீகரித்து வைத்து ஆலோசனைகள் கேட்கும் சில கல்வியாளர்கள் இதுவரை பேசாததை பாரதி தம்பி புத்தகத்தில் பேசி இருக்கிறார். ஒரு லட்சம் கோடி முதலீடு திரட்டுவதற்காக உலக மாநாடுகளை நடத்தப்போகும் நாம், பள்ளிக்கூடங்களை எப்படி வைத்திருக்கிறோம் என்பதை ஆதாரங்களுடன் அடையாளம் காட்டுகிறது இந்தப் புத்தகம். மெக்காலே கல்வி முதல் இன்றைய சமச்சீர் கல்வி வரை உள்ள அனைத்துக் கல்வி முறையின் ஓட்டைகளையும் சுட்டிக்காட்டுகிறது. ஆங்கில மொழிக் கல்விக்கும் ஆங்கில வழிக்கல்விக்கும் உள்ள வேறுபாடு தாய்மொழிக் கல்வியால் சிந்திக்கும் திறன் செழுமை அடையும் என்பது இதில் பேசப்படுகிறது. சாதி இன்றைய கல்விக்கூடங்களை நோயைப்போல பிடித்துள்ளது என்பதை வெளிச்சப்படுத்தும் பகுதி கவலையைக் கொடுக்கிறது. வெறும் குறைகளை மட்டுமே பேசும் புத்தகம் அல்ல இது. சிறப்பான அரசுப் பள்ளிகள், அதன் துடிப்பான ஆசிரியர்களை அடையாளப்படுத்தவும் செய்கிறது. சிறந்த உண்மையான கல்வியைப் பற்றி ஆசிரிய ஆசான்கள் சொன்ன கருத்துகள் இதில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. ஒளி குறைந்து இருள் கூடும். அந்திப் பொழுதைப் போல வெளிச்சம் குறைந்து கொண்டே வருகிறது. எனினும் நம்பிக்கையின் கீற்று இன்னும் மிச்சம் இருக்கிறது என்கிறார் பாரதி தம்பி. அந்த நம்பிக்கைக் கீற்றை அடையாளப்படுத்தும் அகல் விளக்காக இருக்கிறது இந்தப் புத்தகம். கல்வித் துறையை சீர்படுத்த சரியான பாடப்புத்தகம் இது. -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 18/3/2015.