கலாமின் திருப்புமுனைகள்
திருப்புமுனைகள், டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாம், தமிழில்-சிவதர்ஷினி, கண்ணதாசன் பதிபப்கம், 23, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை 17, விலை 120ரூ.
அக்னி சிறகுகள் சாதனை மனிதர் எழுதி, விற்பனையில் சாதனை படைத்த புத்தகம். 1992ம் ஆண்டு வரையிலான தனது வாழ்க்கையை அந்தப் புத்தகத்தில் அப்துல் கலாம் சொல்லி இருந்தார். அதற்குப் பிந்தைய நிகழ்வுகளின் தொகுப்புதான் இந்தத் திருப்பு முனைகள். 2007 ஜுலை 24ம் தேதி, இந்தியக் குடியரசுத் தலைவர் பொறுப்பில் இருந்து விடைபெறும் நாளில் இருந்துதான் தொடங்குகிறார். அங்கேயே அப்துல்கலாம் என்ற மனிதரை உணர முடிகிறது. வழி அனுப்பவும், சந்திப்புகளில் கலந்து கொள்ளவும் வந்தவர்கள், கட்டி வைக்கப்பட்டு இருந்த எனது மூட்டை முடிச்சுகளின் மீது பார்வையை ஓட விட்டனர். அவை மொத்தமே இரண்டு சூட்கேஸ்களுக்குள் அடங்கிவிட்டன. நான் என்னுடன் எடுத்துச் செல்பவை இவ்வளவுதான் என்று கூறினேன். அங்கே ஒரு கனத்த மௌனம் நிலவியது என்கிறார் அப்துல் கலாம் என்ற நேர்மையாளனைப் பற்றி இந்தச் சமூகம் படிக்க வேண்டிய முதல் பாடம், முதல் பக்கத்திலேயே தொடங்கிவிடுகிறது. அவருடைய பிறப்பில் இருந்தே இந்தக் குணம் இருக்கிறது. கிராம சபைத் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்ட தனது தந்தைக்கு ஒருவர் அன்பளிப்பு தந்தபோது அவர் மறுத்துள்ளார். ஒரு மனிதனை ஆண்டவர் பொறுப்பான பதவியில் உட்காரவைக்கும்போது அவனது தேவைகளை அவரே கவனித்துக்கொள்வார். அந்த மனிதன் அதை மறுத்துவிட்டு ஏதாவது ஒன்றைத் தனதாக்கிக் கொள்ள முயன்றால் அது சட்டவிரோதமாகப் பெறும் வெகுமதியாகக் கருதப்படும் என்றாராம். 1947ல் தனது தந்தையார் சொன்னதை 2007ல் கடைப்பிடிப்பவராக இருந்ததால்தான் அப்துல் கலாம், ஜனாதிபதி பதவியைத் தாண்டி மதிக்கப்படுகிறார். தன்னை ஜனாதிபதி ஆக்க வாஜ்பாய் முயற்சித்தது முதல்… விலகியது வரை அனைத்தையும் வரிசைப்படுத்தும் கலாம், ஜனாதிபதி பதவி என்ற அமைப்பு உருவாக்கி வைத்திருக்கும் விதிமுறைகளையும் நடவடிக்கைகளையும் நான் முழுமையாகக் கடைப்பிடித்தேன் என்று சொல்ல முடியாது. அரசாங்கத்தின் தலைவர் என்று பெயரளவுக்கு உட்கார வைக்கப்பட்டு இருக்கும் ஜனாதிபதியின் பங்களிப்பு நாட்டுக்கு மிகவும் குறைவாக இருப்பதாகவே நான் கருதுகிறேன்” என்று உண்மையாய்ச் சொல்கிறார். அரசியல் எல்லைகளைத் தாண்டி நிர்வாக அமைப்பு செயல்பட்டால் மட்டுமே நாடு முன்னேற முடியும் என்பது இவரது கணிப்பு. கல்வி அறிவு படைத்த அரசியல்வாதிகள் கூட்டம் ஒன்று நாட்டில் உருவாக்க வேண்டும் என்பது இவரது விருப்பம். தரமற்ற அரசியல் செயல்பாடுகள் தேசத்தை துன்பப் பாதையில் வழிநடத்திச் சென்று தவிர்க்க முடியாத பெரும் துயரிலும் அழிவிலும் தள்ளிவிடும் என்பது இவரது வருத்தம். இந்தியாவின் முதல்குடிமகனாக இருந்து இறங்கிய பிறகு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பாடம் நடத்துவதையே நல்ல குடிமகனுக்கான இலக்கணம் என்று மெய்ப்பித்த கலாம் வாழ்க்கை எல்லாரையுமே வழி நடத்தும். -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 2/12/12.