ஒப்பரிய உலகச் சான்றோர்கள் சோசலிச சமுதாய மேதைகள்
ஒப்பரிய உலகச் சான்றோர்கள் சோசலிச சமுதாய மேதைகள், செவல்குளம் ஆச்சா, சுரா பதிப்பகம், சென்னை 40, பக். 202, விலை 90ரூ.
சோசலிச சமுதாய மேதைகள் என்ற வரிசையில் சீனாவின் ஸன் யாட் ஸென், காரல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகிய மூவரையும் வைத்து அவர்களுடைய வாழ்க்கையின் முக்கியச் சம்பவங்களைச் சுவையாக விளக்கும் நூல். சீனாவில் மஞ்சு வம்சத்தின் ஆட்சியை எதிர்த்துப் போராடிய ஸன் யாட் சென் அடிப்படையில் பொதுவுடைமைக் கொள்கையை ஏற்றுக் கொண்டு அவ்வழியில் சீனாவில் சோசலிச சமுதாயத்தை உருவாக்கப் பாடுபட்டவர் அல்ல. எனினும் சோசலிசக் கருத்துகளில் ஈடுபாடுடையவர். அவருடைய வாழ்க்கைச் சம்பவங்கள் இந்நூலில் மிக விளக்கமாக எழுதப்பட்டிருக்கின்றன. ஸன் யாட் ஸென்னின் வாழ்க்கையை மட்டுமல்ல, சீனாவின் அன்றைய வரலாற்றையும் தெரிந்து கொள்ள முடிகிறது. கம்யூனிசத் தத்துவத்தின் மூல கர்த்தாக்களான காரல்மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகிய இருவரின் வாழ்க்கைப் போராட்டங்களையும், கருத்துக்களையும் மிகச் சுருக்கமாக நூலாசிரியர் விவரித்துள்ளார். கார்ல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் காலத்திய உலகச் சூழ்நிலை அவர்கள் எழுதிய புத்தகங்கள், அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த அற்புதமான நட்பு என இந்நூல் மேலும் விரிந்து செல்கிறது. நன்றி: தினமணி, 5/8/2013.
—-
செம்மறி ஆடு வளர்ப்பு, முனைவர்கள் சி. சவுந்திரராஜன், சி. சிவக்குமார். இரா. பிரபாகரன், சங்கம் பதிப்பகம், 43, மலையப்பெருமாள் தெரு, சென்னை 1, விலை 250ரூ.
செம்மறி ஆடு வளர்ப்பது என்பது லாபரகரமான தொழிலாகும். இந்த வகை ஆடு உற்பத்தியில் உலக அளவில் இந்தியா இரண்டாவது இடத்தி வகிக்கிறது. செம்மறி ஆட்டை வளர்ப்பது எப்படி? எத்தனை ஆடுகளை வளர்த்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்? செம்மறி ஆட்டுப்பண்ணை நடத்த பாங்கிகள் அளிக்கும் கடன் உதவி… இப்படி எல்லா விவரங்களும் இந்நூலில் உள்ளன. நிறைய படங்களும் இடம் பெற்றுள்ளன. செம்மறி ஆடு வளர்க்க விரும்புவோருக்கு சிறந்த வழிகாட்டி இந்த புத்தகம். நன்றி:தினத்தந்தி, 31/7/2013.