கலைமகள் தீபாவளி மலர்
கலைமகள் தீபாவளி மலர், பக். 332, விலை 150ரூ.
கலைமகள் இதழின் 80வது வருடத்தில் பூத்த மலர் இது. காஞ்சி மகா பெரியவரின் ஸ்ரீசக்ரம் கட்டுரையில் ஸ்ரீசக்ரத்தின் சிறப்புகள், நவாவரண பூஜை ஆயிவற்றை சுவாமிகளின் விளக்கத்தில் படிக்கும்போது சிலிர்ப்பு. அப்துல் கலாம் பசுமை சக்தி திட்டம் கட்டுரையில் மரம் வளம் பெற்ற பசுமை வீடுகள் பற்றிச் சொல்கிறார். கடவுள் அணுவும் சிவனின் நடனமும் என்ற எஸ். குருமூர்த்தியின் கட்டுரை, சாலை சங்கம் சபை என்ற வள்ளலார் குறித்த நா. மகாலிங்கம் கட்டுரை, பி.என். பரசுராமனின் பாரப்போர் தந்திரங்கள் கட்டுரையாவும் அருமை. மு. ஸ்ரீனிவாசன் எழுதிய ஜைனர்களின் சத்ருஞ்ஜயா பயணக் கட்டுரையும், பி.ஆர். துரை எழுதிய நவராத்திரி முதல் நவராத்தினம் வரை என்ற ஏ.பி.நாகராஜன் குறித்த கட்டுரையும் தகவல் களஞ்சியம். எல். கைலாசம் திருவிதாங்கூர் மன்னரைப் பேட்டி கண்டுள்ள பத்மநாபதாசர் வரலாற்றுப் பெட்டகம். ஐ.ரா.சுந்தரேசனின் அல்ப மானிடன் நகைச்சுவைக் கதை வழக்கமான நகைச்சுவை விருந்து. நூற்றாண்டு காணும் க.நா.சு., மு.வ. ஆகியோர் குறித்த கட்டுரைகள் நல்ல பதிவு. மலரில் முத்தாய்ப்பாக திருவாரூர் தியாகராசரின் சரிதமும் அதற்கான ஒவியர் பராஸ்கரின் வண்ணப்படங்களும் சிறப்பாக அமைந்துள்ளன.
—-
விகடன் தீபாவளி மலர், பக். 400, விலை 120ரூ.
பனி போர்த்திய மலைத் தொடரான திருக்கையிலாய யாத்திரையை விவரிக்கும் கட்டுரையிலிருந்து பாலியல் தொழிலாளி என்பதில் பெருமை கொள்ளும் நளினி ஜமீலாவின் பேட்டிவரை எல்லாமே இருக்கிறது விகடன் தீபாவளி மலரில். நாம் ஓரளவு அறிந்த புண்ணிய தீர்த்தங்களைப் பற்றிய விரிவான தகவல்களும் பதினெட்டு நாட்கள் நடந்த மகாபாரதப் போரை ஆறு பக்கங்களில் அழகாகச் சுருக்கித் தரப்பட்டிருக்கும் ஆரூர்தாஸின் கட்டுரையையும் குறிப்பிடப்பட வேண்டியவை. கேரளத்துப் படகுப் பயணமும் அருகிக் கொண்டிருக்கும் பொம்மலாட்டக் கலை குறித்த பதிவுகளும் சிறப்பானவை. விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணின் பேட்டியில் நாம் அறிந்திராத ஆனால் அறிந்து கொள்ள வேண்டிய பல அரிய தகவல்கள் உள்ளன. பாரதி அறிஞர் ரா.அ.பத்மநாபனின் நேர்காணலும் ஸ்ரீ ரங்கத்து வெள்ளையம்மாள் கதையும் பல வியப்புகளை உள்ளடக்கியுள்ளன. சினிமா சற்று தூக்கலாக இருந்தாலும் மணமுள்ள மலர் இது. நன்றி: தினமணி, 26/11/12.