சீவக சிந்தாமணி ஓர் கூர்நோக்கு
சீவக சிந்தாமணி ஓர் கூர்நோக்கு, முனைவர் ம. ராஜாத்தி செல்வக்கனி, கொ. ஹேமா ஜோயல், தமிழ்த்துறை, ஜி.ஆர். தாமோதரன் அறிவியல் கல்லூரி, பக். 112, விலை 230ரூ.
ஓர் கூர்நோக்கு என, ஓசையின்பம் கருதிப் பெயர் வைத்தனர்போலும்.(உயிரெழுத்தை முதலாகக் கொண்ட சொல்முன் ஓர் வரும்) தமிழ்க் காப்பியங்கள் பற்றிக் குறிப்பிட்டு அவற்றுள் சீவக சிந்தாமணி பெற்றுள்ள சிறப்புக்களை புலப்படுத்துவதே நூலின் நோக்கம். சீவகன் வாழ்வியல் எனும்தலைப்பில் சீவக சிந்தாமணியின் கதைச் சுருக்கம் எழுதப்பட்டுள்ளது. கட்டியங்காரனின் சதி பற்றி விளக்கமாக எழுதி, அறிவுரைகளையும் வழங்கியுள்ளனர் ஆசிரியர்கள். சங்க இலக்கியம், திருக்குறள், கம்பராமாயணம், திருமந்திரம் போன்ற நூல்களிலிருந்து மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன. பாத்திரங்களின் தன்மை, படைப்புத்திறம், காப்பிய இன்பம் எல்லாம் கலந்து வருமாறு நூல் எழுதப்பட்டுள்ளது. திரும்பத் திரும்பக் கதை சொல்லப்படுவதைத் தவிர்த்திருக்கலாம். சீவகசிந்தாமணி படிக்க இயலாதவர்கள் இந்நூலைப் படித்து இன்புறலாம். -கவிக்கோ ஞானச்செல்வன்.
—-
பல்லவர் பாண்டியர் அதியர் குடைவரைகள், மு. நளினி ஆர். கலைக்கோவன், சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை 600078, பக். 352, விலை 300ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-867-9.html
பல்லவர் குடைவரைகளில் சிங்கப் பெருமாள் கோவில் தொடங்கி, தான்தோன்றிமலை வரை 12, அதியர்குடைவரைகள் 2, பாண்டியர் குடைவரைகள் பிள்ளையார்பட்டி தொடங்கி பூதப்பாண்டி வரை 6, ஆக மொத்தம் 20 குடைவரைகள் இதில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. தமிழக குடைவரைகள் பற்றி, ஏற்கனவே ஆறு ஆய்வுத் தொகுதிகளை வெளியிட்டுள்ள இவ்வாய்வாளர்களின் ஏழாவது (நிறைவு) ஆய்வு நூல் இது. இந்நூலில் இடம் பெற்றுள்ள குடைவரைகளின் முகப்பு, அர்த்த மண்டபம், கருவறை, சுவர்ச்சிற்பங்கள் போன்றவற்றை 56 பக்கங்களில் வண்ணப் படங்களுடன் இணைத்துள்ளது நூலுக்குச் சிறப்பு சேர்த்துள்ளது. தமிழகத்தில் கலை வரலாற்றிற்கு பெருந்தொண்டாற்றி வரும் டாக்டர் மா. ராஜமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தைச் சேர்ந்த நூலாசிரியர்களின் பணி பாராட்டுக்குரியது. இத்தகைய ஆய்வு நூல்களை வெளியிட்டு வரும் சேகர் பதிப்பக உரிமையாளர் வெள்ளையாம்பட்டு சுந்தரமும் பாராட்டத்தக்கவர். -பின்னலூரான். நன்றி: தினமலர், 10/11/2013.