விஜயபாரதம் தீபாவளி மலர்
விஜயபாரதம் தீபாவளி மலர், (2 புத்தகங்கள்) பக். 658, விலை 100ரூ.
தேசியமும் தெய்வீகமும் கமழும் வழக்கமான சிறப்பு அம்சங்களுடன் வந்துள்ளது இந்த மலர். வருடம் முழுதும் அமர்ந்து படிக்கத் தக்கதாக அதிகமான கட்டுரைகள். சிருங்கேரி சுவாமிகளின் அருளுரையுடன் மலரில் ஆன்மிகம் முகிழ்க்கிறது. ஸ்ரீராமகிருஷ்ணர் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன என்ற சுவாம் விமூர்த்தானந்தரின் கட்டுரை இளைஞர்களுக்கு நன்னெறி புகட்டுவது. பாங்காக் மகாமாரியம்மன் கோவில் குறித்த புஷ்பா தங்கதுரை கட்டுரை நம் பாரம்பரியம் வெளிநாட்டில் பரவியிருக்கும் பாங்கைச் சொல்கிறது. மகாத்மா காந்தி நாத்திகத்திலிருந்து ஆத்திகத்திற்கு என்ற லா.க. ரங்கராஜன் கட்டுரை, ஆர்.பி.வி.எஸ். மணியனின் ராமராஜ்யத்தில் சில காட்சிகள் ஆகியவை தேசியத்தை வலியுறுத்தும் தெய்வீகங்கள், அண்மையில் மறைந்த ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் கு.சீ. சதர்ஸன் குறித்த அனுபவப் பகிர்வுகள். ஒரு நல்ல மனிதரின் ஆளுமையை வெளிப்படுத்துகிறது. திருமுறைகள், ஆலயங்கள், நாட்டின் இன்றைய அரசியல் சூழலை விளக்கும் கட்டுரைகள், சிறுகதைகளின் வழியே தேசிய சிந்தனைகள், கவிதைகள், வண்ணப்படங்கள் என தனது தனித்துவத்தை இழக்காமல் திகழ்கிறது இந்த வருட தீபாவளி மலர்.
—-
கோபுர தரிசனம் தீபாவளி மலர், பக். 388, விலை 120ரூ.
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். ஆனால் கோபுர தரிசனம் தீபாவளி மலரைப் படித்தால் கட்டாயம் சில புண்ணியம் நம்மை வந்து அடைவது திண்ணம். காசி நகரிலே.. கங்கைக் கரையிலே… என்ற திருத்தலச் சிறப்புடன் ஆரம்பமாகி, ராஜாஜியின் நூறு ஹெல்த் இன்ஸ்பெக்டர், அருட்செல்வர் நா. மகாலிங்கத்தின் வள்ளலார் வழி, காஞ்சி மகாபெரியவரின் தீர்த்தம் அம்ருதமே, சுதா சேஷைய்யனின் ஆழ்வார் அனுபவித்த கண்ணன், ஜஸ்டிஸ் பி. ஜோதிமணியன் கனிந்த பக்தியினால் கல்லும் மலராகும். சோவின் தொண்டரடிப் பொடியான விப்ர நாராயணன், பி. சுவாமிநாதனின் அன்னதான சிவன் போன்றவை படிக்கப் புண்ணியம் சேர்க்கும் கட்டுரைகள். கௌதம நீலாம்பரனின் புரட்சிகர முன்கோபி என்று கூறும் விஸ்வாமித்திரரை சாந்தமான மனிதராகக் காட்டி, விசுவாமித்திரனின் வேள்விக்கு ராமபிரான் உதவிய திறத்தை திகட்டத் திகட்டத் தந்துள்ளார். ம.செ.வேதா, மாருதி, பத்மவாசன், தாமரை, ரவி, லதா ஆகியோரின் ஓவியங்கள் பக்கத்துக்குப் பக்கம் கண்ணைக் கவருகின்றன. அதிலும் ஓவியர் வேதாவின் கோட்டோவியமும், பத்மவாசனின் கோட்டோவியத்துடன் கூடிய சங்கரனே சங்கரர் என்ற ஆதிசங்கரர் பற்றி வரலாற்றுத் துதியமுதமும் படிக்கவும் காணவும் சுவைக்கிறது. இதிலுள்ள அனைத்தும் மணமிக்க மலர்கள். நன்றி: தினமணி, 26/11/12.