காடுகளுக்காக ஒரு போராட்டம்
காடுகளுக்காக ஒரு போராட்டம், சிக்கோ மென்டிஸ், தமிழில் ச. வின்சென்ட், எதிர்வெளியீடு, விலை 120ரூ.
To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023826.html இறுதி சடங்கிற்கு பூக்கள் வேண்டாம். பிரேசிலை சேர்ந்த, சிக்கோ மென்டிஸ் ஆங்கிலத்தில் எழுதி, பேராசிரியர் ச.வின்சென்ட், ‘காடுகளுக்காக ஒரு போராட்டம்’ என, தமிழில் மொழிபெயர்த்த நூலை சமீபத்தில் படித்தேன். எதிர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இயற்கையை அழிப்போருக்கு, அரசு நிர்வாகம் துணை நிற்பதும், எதிர்ப்பவர்களை கொல்வதும் என்ற உண்மை சம்பவத்தை நூல் விவரிக்கிறது. இயற்கையை காப்பாற்ற போராடி கொல்லப்படும், சிக்கோ மென்டிஸ்தான், நூலையும் எழுதி உள்ளார். பிரேசில் நாட்டின் அமேசான் காடுகளில் உள்ள, ரப்பர் தோட்ட கொத்தடிமை தொழிலாளர்களுக்காவும், ரப்பர் தோட்டங்களை அழிப்பதை எதிர்த்தும் குரல் கொடுக்கிறார் மென்டிஸ். இவரது குரல், சர்வதேச அளவில் ஒலிக்கிறது. ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு, கல்வி முற்றிலும் மறுக்கப்படுகிறது. மென்டிசின் தந்தையும், ரப்பர் தோட்டத் தொழிலாளியே. இதனால் 20 வயதுக்குப் பின்பே, கல்வி கற்கும் வாய்ப்பை மென்டிஸ் பெறுகிறார் மலேசியா, இலங்கை நாடுகளில் ரப்பர் தோட்டம் உருவான பின், அமேசான் காடுகளின் ரப்பரின் மவுசு குறைகிறது. பன்னாட்டு மூலதன வருகையால், பிரேசிலின் ரப்பர் தோட்டங்களை அழித்து, மேய்ச்சல் நிலமாக மாற்றுகின்றனர். இதை எதிர்க்கும் வில்சன் பின்னஹரோவும், மென்டிசும் கொல்லப்படுகின்றனர். தான் கொல்லப்படுவோம் என்பதை அறிந்த மென்டிஸ், ‘என்னுடைய இறுதி சடங்கிற்கு பூக்கள் வேண்டாம். ஏனென்றால், அவை காட்டிலிருந்து எடுத்து வருபவை’ என, எழுதுகிறார். பூக்களைக்கூட எடுக்காமல், காட்டை காப்பாற்ற வேண்டும் என்பது மென்டிசின் வேட்கை. மென்டிசுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து, அரசிடம் புகார் செய்கின்றனர். ஆனால் கொலையாளிக்கு துப்பாக்கி உரிமத்தை, அரசு வழங்குகிறது. பிரேசில் காடுகளுக்கு ஏற்பட்ட நிலைதான், நம் நாட்டில் நீர் நிலைகளுக்கும், அதன் வழித் தடங்களுக்கும் ஏற்பட்டுள்ளது. அதை பாதுகாக்க வேண்டியவர்கள், அழிப்பவர்களுக்கும், ஆக்கிரமிப்பு செய்வோருக்கும் துணை நிற்கின்றனர். பெரும் வெள்ளத்தால் மக்கள் அவதிப்படும்போது, நிவாரணம் வழங்கினால் போகிறது என, நினைக்கின்றனர். இது போன்ற பயணம் நிண்ட தூரம் செல்லாது என்பதை, இந்நூல் உணர்த்துகிறது. -சிவகுருநாதன். (எழுத்தாளர்). நன்றி: தினமலர், 13/12/2015.