காந்திஜியும் தமிழர்களும்
காந்திஜியும் தமிழர்களும், வெ. ஜீவானந்தம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 16, விலை 10ரூ.
காந்தியடிகளின் சுதந்திரப் போராட்டப் பயணத்தில் தங்கள் உழைப்பையும், உயிரையும் கொடுத்த தமிழர்களின் தமிழ்ப் போராளிகளின் பங்கு அளப்பரியது. இதில் முகம் தெரியாத எண்ணற்ற தமிழர்களும் அடங்குவர். சத்தியாகிரகத்திற்காக தன் உயிரைத் தந்த முதல் பெண் என்ற பெருமை வள்ளியம்மை எனும் 16 வயது இளம் தமிழ்ப் பெண்ணுக்கே உரியது. இந்தியத் திருமணச் சட்டங்களை எதிர்த்துப் போரிட்டதில் ஈடுபட்ட 16 பெண்களில் 10 பேர் தமிழ்ப் பெண்கள். 1893-1914 வரை தென்னாப்பிரிக்காவில் நடந்த நீண்ட உரிமைப் போரில் காந்திக்குத் துணை நின்ற தமிழர்களின் பட்டியல் மிகவும் நீண்டது. 1906இல் தென்னாப்பிரிக்க அரசு கொண்டுவந்த, இந்தியர்களில் படித்தவர்கள், படிக்காதவர்கள் எவராயினும் கைரேகை பதித்த அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்ற அவமானச் சட்டத்தை எதிர்த்து, போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவர்களுள் பலர் தமிழர்கள். 1916இல் சோச்ரப் என்ற கிராமத்தில் காந்தி தமது முதல் ஆசிரமத்தை நிறுவியபோது குடியேறிய 25பேரில் 13 பேர் தமிழர்கள். இப்படி தன்னுடன் இணைந்து போராடி, குடும்பத்தை இழந்து, உயிரை இழந்து, வேலையை இழந்து, சிறை சென்ற தமிழர்களின் பெருமையை உணர்ந்த காந்தியடிகள், தமிழர்களை ரத்தப்பாசம் உள்ள உறவினர்களாகவே உணர்ந்தேன். தமிழர்களின் தியாக அடிச்சுவட்டை மற்ற இந்தியர்களும் பின்னபற்ற வேண்டும் என்றார். அந்தவகையில் காந்தியின் வரலாற்றோடு பின்னிப்பிணைந்துவிட்ட தமிழர்களையும் காந்தியையும் எந்நாளும் பிரிக்கவே முடியாது என்பதை இச்சிறிய நூல் விளக்கிவிடுகிறது. நன்றி: தினமணி, 17/8/2014.