நாவல் இலக்கியம்
நாவல் இலக்கியம், மா. இராமலிங்கம், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பக். 176, விலை 110ரூ.
தமிழில் மிக அரிதாகத்தான் இத்தகைய திறனாய்வு நூல்கள் வெளிவருகின்றன. ஊடகங்களும் எழுத்தாளர்களும் பெருகிவிட்ட இந்நாளில் தினம்தோறும் ஒரு புத்தகம் வெளிவந்து, நமது புத்தக அலமாரியை நிரப்புகிறது. ஆனால் படைப்பிலக்கியம் வளர்ந்திருக்கும் அளவிற்கு படைப்புகளைத் திறன் கண்டு தெளியும் திறனாய்வு நூல்கள் வளரவில்லை என்ற சூழ்நிலையில் இப்புத்தகம் வெளிவந்திருக்கிறது. 1972இல் முதல் பதிப்பு கண்ட இந்த நூலுக்கு மு. வரதராசன் அணிந்துரை எழுதியிருப்பது சிறப்பு. இந்த நூல் மீண்டும் வெளிவந்திருக்கிறது. முந்தைய வெளியீட்டைவிட, தற்போதைய வெளியீட்டில் இன்னும் அதிகப்படியான திறனாய்வுகள் சேர்க்கப்பட்டு மெருகேற்றப்பட்டு இருக்கிறது. நாம் பல்வேறு நாவல்களையும் கதைகளையும் படிக்கலாம். பக்கம் பக்கமாக ருசிக்கலாம், பிடித்த வரிகளை மீண்டும் மீண்டும் படித்து புளகாங்கிதம் அடையலாம். ஒரு சாதாரண வாசகனின் ஆர்வம் அத்துடன் முடிந்துவிடுகிறது. ஆனால் இது அதையும் தாண்டி சாப்பிட்ட பின் சமையலறையில் எட்டிப் பார்ப்பது போன்றது. உணவின் சுவை உணர்ந்து, அதன் சேர்மானங்களை அறிந்துகொள்ளும் ஆர்வம் போன்றதொன்று இந்த நூல் முழுவதும் விரவிக் கிடக்கிறது. தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்குப் பெரிதும் பயன்படக்கூடிய நூல். நன்றி: தினமணி, 27/8/2014.
—-
பீர்பல் கதைகள், நெ.சி. தெய்வசிகாமணி, கண்ணப்பன் பதிப்பகம், சென்னை, பக். 320, விலை 150ரூ.
வாய்மொழியாக வழங்கப்பெற்று மக்களுக்கு நீதி புகட்டக்கூடிய கதைகளாக நாம் அறியப்படுவது தென்னிந்தியாவில் தெனாலிராமன் கதைகள். வட இந்தியாவில் பீர்பல் கதைகள். அக்பர் பீர்பல் மேல் கொண்டிருந்த அன்பு, நம்பிக்கை, நெருக்கம், பீர்பலின் வீரம் உள்ளிட்ட அனைத்தும் கதைவழி அறியப்படுகின்றன. உண்மைகளை வெளிப்படையாக பிறர் மனம் புண்படாத வகையில் பதில் சொல்வதில் பீர்பல் வல்லவர் என்பதையே இக்கதைகள் உணர்த்துகின்றன. அக்பரையே சில இடங்களில் பீர்பல் முட்டாளாக ஆக்கிவிடும் காட்சிகளும் உண்டு. ஆனால் அக்பர் அவர்மேல் கோபம் காட்டாமல், மேலும் மேலும் அவர் வாயைக் கிளறி பல உண்மைகளை வரவழைக்கும் கதைகள் ஏராளம் கதைகள் ஒவ்வொன்றும் அறிவின் தேடல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 27/8/2014.