காந்தியத் தாயத்து
காந்தியத் தாயத்து, முனைவர் சுந்தர ஆவுடையப்பன், நேசம் பதிப்பகம், பக். 136, விலை 90ரூ.
காந்தியடிகளின் வாழ்க்கையை மக்கள் மனதில் எளிதில் பதிவு செய்ய முனைவர் ஆவுடையப்பன் எடுத்திருக்கும் உத்தி இது. ஒரு நிகழ்வைச் சொல்லி அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக காந்தியடிகளின் வாழ்வில் நடந்த சம்பவத்தை பொருத்தி விடுகிறார். அதை அந்த உரையாடல் மூலம் நிறைவு செய்வதால் படிப்போர் மனதில் எளிதில் காந்தியின் கொள்கைகள் வந்து உட்கார்ந்துவிடுகின்றன. அகிம்சை, சத்தியம், அன்பு, சகிப்புத்தன்மை, சத்தியாகிரகம் போன்றவற்றை காந்தி எப்படி தன் வாழ்வின் நெறிமுறைகளாகக் கொண்டு வாழ்ந்து காட்டினார் என்பதை தெளிவாகப் புரியவைத்துவிடுகிறார். காந்தியின் தொண்டு, மக்களுக்காக காந்தி நடத்தி போராட்டங்கள், அதற்காக அவர் பட்ட அவமானங்கள், தவறு செய்தோரை மன்னிக்கும் மாண்பு, பிரிட்டிஷ் ஆட்சி பற்றிய விவரணை, காந்தி அடைந்த வெற்றி, அவர் மக்களுக்கு போதிக்கும் கொள்கைகள் – இவையெல்லாம் அடங்கியதுதான் காந்தியத் தாயத்து என்று நம்மை காந்தியின் கொள்கைகளைக் கொண்டே கட்டிப்போட்டுவிடுகிறார் ஆசிரியர். சிறுவர்களும் படிக்கும்படியான எளிய நடை. கூடுதல் பலம். நன்றி: குமுதம், 23/2/2015.