சங்ககாலக் கொற்கைப் பாண்டியர் வெளியிட்ட செழிய செழியன் நாணயங்கள்

சங்ககாலக் கொற்கைப் பாண்டியர் வெளியிட்ட செழிய செழியன் நாணயங்கள், இரா. கிருஷ்ணமூர்த்தி, கார்னெட் பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 400ரூ.

4-5 மி.மீ. குறுக்களவுள்ள கோள வடிவிலான ‘நாணயங்கள்’ சிலவற்றைப் பற்றிய விவரங்களைப் படிக்கும்போது வியப்பாக இருக்கிறது. இவற்றின் எடை கூட ஒரு கிராமில் ஆறில் ஒரு பங்குக்கும் சற்றே கூடுதலாகத்தான் இருந்திருக்கிறது. 4மி.மீ. என்பது சராசரியான ஒரு நெல்மணியின் நீளம்தான் இருக்கும். கி.மு. மூன்றாம் நூற்றாண்டு வாக்கிலேயே தமிழகத்தில் இப்படிப்பட்ட நாணயங்களை உருவாக்கி இருக்கிறார்கள். சின்னஞ்சிறியதாக இந்த மாதிரி ஒரு பொருள் நதிப்படுகைகள் போன்ற இடங்களில் தேடியிருந்தால் நம் கைகளிலும் கிடைத்திருக்கும்தான். ஆனால் இவற்றை நாணயங்கள் என்று இனம்கண்டு சொல்கிற ஆற்றல் உள்ளவர்கள் லட்சத்தில் ஒருவராது இருப்பார்களா என்பது சந்தேகமே. அப்படிப்பட்ட ஆற்றலுள்ள வெகு சிலருள் ஒருவர் நாணவியல் அறிஞராகப் புகழ்பெற்று விளங்குகிற (தினமலர்) இரா. கிருஷ்ணமூர்த்தி. முப்பதாண்டு காலத்துக்கும் மேலாகப் பாத்திரக் கடைகளிலும் பல்வேறு இடங்களிலும் தேடித் தேடிச் சேகரித்த தொல்பொருள் சான்றுகளான இந்த நாணயங்களை இவரால் உடனே இனங்கண்டறிய முடிந்ததில்லை. இருபது ஆண்டுகளுக்கு முன்னால் திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயில் அருகிலிருந்த ஒரு சிறிய பாத்திரக் கடையில் இரண்டு கிலோ பழைய நாணயங்களை வாங்கினாராம். அவை பெரும்பாலும் தாமிரபரணி ஆற்றில் கிடைத்தவையாம். நீண்ட காலமாக ஆற்றில் கிடந்தமையால் அவை உருத்தெரியாமல் புளியங்கொட்டை வடிவத்தில், அதே நிறத்தில் இருந்திருக்கின்றன. அவற்றை அப்படியே ஒரு கண்ணாடிக் குவளையில்போட்டு மூடிவைத்துவிட்டாராம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் அவற்றை எடுத்துப் பலமுறை சுத்தம் செய்தபோது அதில் பதிந்திருந்த சில குறியீடுகள் கண்ணுக்குத் தெரிந்திருக்கின்றன. இன்னும் பல மாதங்கள் முயன்றதில் அவற்றில் யானை போன்ற உருவங்களும் தமிழ் பிராமி எழுத்து வடிவத்தில் ‘செழிய’ என்ற பெயர்ப்பதிவும் தெரிய வந்தனவாம். இந்த அடிப்படையில் நூற்றுக்கணக்கான ‘நாணயங்களை’ ஆய்வு செய்து அவற்றைப் பற்றிய விளக்கங்களை, நாணயங்களின் வண்ணப் படங்களோடும் தொகுத்து வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பெரிதும் பயன்படத்தக்க வகையில் இப்போது அரிய நூலாக வெளியிட்டிருக்கிறார்கள். படவிளக்கங்களைத் தவிர வரலாற்றுச் செய்திகள் பலவற்றை உள்ளடக்கிய கட்டுரைகளும் இடம்பெற்றள்ளன. மதுரைப் பாண்டியர்களைப் போலவே, கொற்கையை ஆண்ட பாண்டியர்களைப் போலவே, கொற்கையை ஆண்ட பாண்டியர்களும் சங்ககாலத்தில் பெரும் செல்வாக்கோடு விளங்கி நாணயங்களை உருவாக்கியிருக்கிறார்கள். இருவகை நாணயங்களின் வேறுபாட்டையும் ஆராய்ந்து இரண்டுக்கும் தொடர்பில்லை என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார் ஆசிரியர். பெயர் பொறிக்கப்பட்ட சங்ககால நாணயம் எதுபும் 1984ஆம் ஆண்டு வரை கிடைத்ததில்லையாம். அந்த ஆண்டில் ஆசிரியர் கண்டறிந்து வெளியிட்டது ‘பெருவழுதி’ என்று பெயர் பொறித்த மதுரைப் பாண்டியர் காலத்து நாணயங்களைப் பற்றிய விவரங்களை. இப்போது வெளியாகியிருப்பது ‘சங்ககாலக் கொற்கைப் பாண்டியர் வெளியிட்ட செழிய, செழியன் நாணயங்கள்” என்னும் தலைப்பிலான நூல். இந்தக் கொற்கைப் பாண்டியர்கள் ஆமுண்ட நிலப்பகுதி ‘தாம்ரபர்னி’ என்று வழங்கப்பட்டது பற்றிய ஒரு கட்டுரையும் சுவையானது. வரலாற்று ஆர்வமுடைய அனைவருமே விழி விரியப் படிக்கக்கூடிய நல்ல நூல் இது. -சுப்ர. பாலன். நன்றி: கல்கி, 1/3/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *