காவடிச் சிந்தும் கவிஞனின் வரலாறும்
காவடிச் சிந்தும் கவிஞனின் வரலாறும், அரங்க. சீனிவாசன், அருள் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை 78, விலை 120ரூ.
வண்ணமயமான வாழக்கை. பாரதியின் வாழ்க்கையைப்போல அண்ணாமலை ரெட்டியாரின் வாழ்க்கையும் வண்ணமயமானது. அரங்க. சீனிவாசனால் எழுதப்பட்ட காவடிச் சிந்தும் கவிஞன் வரலாறும் என்னும் நூலின் வழியே இதை அறிய முடிகிறது. அவர்களுக்கெனத் தனி சாம்ராஜ்யம். அதை கவிராஜனாகத் தன்னை அறிவித்துக்கொள்வது போன்ற பண்புகளில் இருவருக்கும் உள்ள உற்றுமை நெருக்கத்தைத் தருகிறது. கண்கள் கூசப் பிரகாசத்தொளி மாசற்று விலாசத்தோடு இதுபோன்ற மொழியின் சௌந்தர்யம் கேட்பவரை வசீகரிக்கக்கூடியது. அண்ணாமலையார், எல்லாப் பிள்ளைகளையும்போல அக்காலத் திண்ணைப் பள்ளிக்குப் போயுள்ளார். ஆனால் ஆசிரியர் சொல்வதை அப்படியே மனனம் செய்து, ஒப்புவிக்கவோ, அவர் சொல்லை வேதவாக்காக எடுத்துக்கொள்ளும் மனநிலையோ அவருக்கு இல்லை. ஆசிரியரிடமே மொழி விளையாட்டைக் காட்டி மிரட்டியுள்ளார். இது உருப்படக்கூடிய மாணவனின் செயலா? அவருடைய திறமைக்கு இங்கு தீனி போட முடியாது என அவரைப் பள்ளியில் இருந்து அனுப்பிவிட்டார்கள். வாயெடுத்தாலே எதுகை மோனையுடன் பாடல்களைப் பாடினார். இப்படிப்பட்ட உருப்படாத இளைஞர்களுக்கு ஆதரவளிப்பதற்கென்றே ஊரில் ஒருவர் இருப்பார் அல்லவா? அவர்தான் சுந்தர அடிகள் என்னும் தமிழ்ப் புலவர். அண்ணாமலையாரின் இந்த ஆற்றலை அறிந்த அவர், அவருக்குச் சில பாடங்களைக் கற்பித்தார். சென்னவ ரெட்டியாருக்கு தன்னுடைய ஒரே மகன் இப்படித் தகாத வழியில் செல்வதைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவரை விவசாயப் பணிகள் பார்க்கப் பணிக்கிறார். நிலத்துக்குப் பாய வேண்டிய நீரை ஓடைக்குத் திருப்பிவிட்டு அண்ணாமலையார் மரத்தடியில் கவிதையுடன் வழக்கமான தன் விளையாட்டை நிகழ்த்தியிருக்கிறார். இச்செயலால் சினம் கொண்ட அவர் தந்தை, உனக்கு இனிச் சாப்பாடு கிடையாது எனச் சபித்துள்ளார். இந்த நூல் முழுவதும் அண்ணாமலையாரின் மொழி விளையாட்டுகளைப் பாடல்களுடன் கொடுத்துள்ளார் ஆசிரியர். இப்பாடல்கள் வாசிப்புக்குச் சுவை கூட்டுகின்றன. சுந்தர அடிகளார் அண்ணாமலையார் பற்றிக் குறிப்பிடும்போது அண்ணாமலையாருக்கு இலக்கணம் கைவரவில்லை என்கிறார். அதுபோல உ.வே. சாமிநாதயைய்யரும், அவருக்கு இலக்கணங்களில் அதிகமாகப் புத்தி செல்லவில்லை என்று என் சரிதம் நூலில் குறிப்பிட்டுள்ளார். இவற்றிலிருந்து அண்ணாமலையார் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டவராக இருந்திருக்கிறார் என்பது தெளிவாகிறது. ஊற்றுமலை ஜமீன் மருதப்பத் தேவர்தான் அண்ணாமலையாரின் புரவலர்களில் பிரதானமானவர். காவடிச் சிந்தை பதிப்பித்த பெருமை இவருக்கே உரியது. இதன் மூலம்தான் அண்ணாமலையாரின் புகழ் எட்டுத் திக்கும் பரவியது. அண்ணாமலையார் தன் தோற்றத்தில் அக்கறையுடயவராக இருந்திருக்கிறார். ஆடை, அணிகலன்கள், கம்பீரமான நடை எல்லாம் கவிராஜன் என்னும் சிறப்பு பெயருக்குப் பொருள் சேர்த்தன. பெண்களுடனான உறவிலும் எல்லையில்லாமல் திளைத்துள்ளார். ஆயுட்காலம் முப்பது சொச்சம்தான் என்றாலும் அண்ணாமலையாரின் வாழ்க்கை கொண்டாட்டமாகவே இருந்ததுள்ளது. நன்றி: தி ஹிந்து, 6/10/2013.