காவிரி பிரச்சனையின் வேர்கள்
காவிரி பிரச்சனையின் வேர்கள், வெ. ஜீவக்குமார், பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 18, விலை: ரூ. 30. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-013-4.html
தண்ணீர்ப் பிரச்சனையாகவும் கண்ணீர் விவகாரமாகவும் இருப்பது காவிரி. இது தொடர்பாக தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டி காவிரி ஆணையம் இறுதித் தீர்ப்பை வழங்கி, அதுவும் மத்திய அரசிதழில் வெளிவந்தாலும், உரிய தண்ணீர் அளவை கர்நாடகம் வழங்க மறுத்து வருகிறது. உச்ச நீதிமன்றம், காவிரி ஆணையம் ஆகியவற்றின் உத்தரவுகளை மீறும் வகையில் கர்நாடக அரசு செயல்பட்டுவரும் நிலையில் இந்தப் புத்தகம் வெளிவந்துள்ளது. கர்நாடக மாநிலத்தைவிட மத்திய அரசாங்கமே காவிரிப் பிரச்னையில் மெத்தனமாக நடந்துள்ளது என்பதைச் சொல்கிறது இந்தப் புத்தகம். காவிரி ஆணையம் தனது இறுதித் தீர்ப்பை கடந்த 2007 – ம் ஆண்டு வெளியிட்டது. அரசிதழில் இதை வெளியிட ஆட்சேபனை இல்லை என்று, 2012 – ம் ஆண்டு டிசம்பர் 5 – ம் தேதி கர்நாடக மாநில அரசே சொல்லி இருக்கிறது. ஆனால், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரேன் ராவல், கர்நாடகம் தடை விதிக்கிறது என்ற அர்த்தத்தில் பதில் சொன்னதை நீதிபதிகள் கண்டித்தனர். இதன் பிறகும், கர்நாடகம் தன்னுடைய நிலையை மாற்றிக் கொண்டு முரண்பிடிக்கத் தொடங்கியது. இப்படிப்பட்ட சட்ட விவாதங்களைச் சொல்லும் இந்தப் புத்தகம் காவிரி குறித்த சுருக்கமான வரலாற்றைப் பதிவுசெய்கிறது. ‘ஓடி வரும் காவிரியின் ஓசை தமிழ்நாட்டில் கேட்கிறது’ என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் சொன்னது முதல் பொருநராற்றுப்படை, பட்டினப்பாலையில் உள்ள இலக்கிய ஆதாரங்கள் வரையிலான தகவல்கள் இதில் உள்ளன. இது தொடர்பாக இதுவரை போடப்பட்ட ஒப்பந்தங்களும் இதில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. ‘காவிரிப் பேச்சுவார்த்தைகளில் மத்திய அரசு நேர்மையாக நடந்துகொள்ளவில்லை. நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு கொடுக்காமல் முட்டுகட்டை போட்டது. 1975 – ம் ஆண்டுக்கு முன்னதாக காவிரி உடன்பாடு ஏதோ ஒரு வகையில் ஏற்பட்டு இருக்க வேண்டும். இதை தாமதப்படுத்தியது மத்திய அரசுதான். உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் வழிகாட்டுதலையும் கூடப் பின்பற்றாமல், உச்சநீதிமனறத்துக்கு அவமதிப்பும், வேலைப் பளுவும் , நெஞ்சு வலியும் வருவதற்கான சூழல்களைத் தொடர்ந்து உருவாக்குகிறது. கடைசிக்கும் கடைசி உதாரணம், நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடாமல் தாமதப்படுத்துவதாகும். மத்திய அரசு, கூட்டாட்சியின் காவலன் என்ற பொறுப்பை மீறி இருக்கிறது’ என்பதை ஆதாரங்களுடன் குற்றம் சாட்டுகிறது இந்தப் புத்தகம். வெளிநாடுகளில் தண்ணீர் சம்பந்தமாக உருவான பிரச்சனைகள் அனைத்தும் பேச்சுவார்த்தைகள் மூலமாகவே திர்க்கப்பட்டுள்ளன. இந்தியாவுடன் முரண்பட்டு நிற்கும் பாகிஸ்தானுக்கும் நமக்கும் நதி நீர் சம்பந்தமாக சிக்கல் இல்லை. நிலத்தை ஆக்கிரமிக்கும் சீனாவுடன் இந்தச் சிக்கல் இல்லை. ஆனால், ஒரே நாட்டுக்குள் இருக்கும் இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சனை தீர்க்க முடியாததாக மாறிவிட்டது. தமிழகம், காவிரிப் பாசனத்தை நம்பி இருக்கும் மாநிலம். ஆனால், கர்நாடகத்துக்கு கிருஷ்ணா நதிதான், பாசனத்துக்கு அடிப்படை. இத்தகைய நடைமுறை யதார்த்தம்கூட ஏற்கப்படவில்லை. சட்டரீதியாகவும் நீதிமன்ற உத்தரவுப்படுயும் தார்மீக நெறிமுறைப்படியும் காவிரி நீரில் உரிமை கொண்டாட தமிழகத்துக்கு முழு உரிமை உண்டு. அதில் நாம் தவறவிட்ட விஷயங்களைப் பட்டியல் இடும் ஆதாரமாக இருக்கிறது இந்தப் புத்தகம். நன்றி: ஜுனியர் விகடன் (7.4.2013).